விக்கிரமராஜா: காலாவதி சுங்கச்சாவடிகளை உடனடியாக அகற்றாவிட்டால் டெல்லி முற்றுகை..!

நாடு முழுவதும் உள்ள 1000-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு 2 முறை கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறது. அதேபோல, தமிழகத்தில் 64 இடங்களில் சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த சுங்க கட்டணத்தை ஒவ்வொரு ஆண்டும் உயர்த்திக்கொள்ள அனுமதியும் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், லோக்சபா தேர்தல் வந்துவிட்டதால், கடந்த ஏப்ரல் மாதம் மாற்றி அமைக்கப்பட வேண்டிய சுங்கக்கட்டணம் நாடாளுமன்ற தேர்தலால் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இதற்கு பிறகு தேர்தல் முடிந்த நிலையில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கடந்த ஜூன் மாதம் சுங்கக்கட்டணத்தை உயர்த்தியிருந்தது. அதன்படியே, தமிழ்நாட்டிலுள்ள 36 சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டு 5% வரை கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டது. அந்தவகையில், தமிழ்நாட்டில் 25 சுங்கச்சாவடிகளில் 5 முதல் 7 சதவீதம் வரை சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுகிறது. விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை, சமயபுரம், மதுரை எலியார்பத்தி, ஓமலூர் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது. ஸ்ரீபெரும்புதூர், வாலாஜா உள்பட 25 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது. சுங்கக்கட்டண உயர்வால் வாகன ஓட்டிகள் ரூ.5 முதல் ரூ.150 வரை கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என்று நேற்றைய தினம் தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் சங்க பலகை, கொடியேற்று நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட விக்கிரமராஜா பேசுகையில், தமிழக சுங்கச் சாவடிகளில் மட்டுமே ஏறத்தாழ ஆண்டுக்கு ரூ.4,200 கோடி சுங்கக் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், மேலும் கட்டண உயர்வு என்பது, பொதுமக்களின் மீது சுமத்தப்படும் பெரும் சுமை என்பதை மத்திய அரசு கவனத்தில் கொண்டு, உடனடியாக இந்த சுங்கக் கட்டண உயர்வை நிறுத்தி வைத்திட வேண்டும்.

மேலும் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்ட விதிகளை மாற்ற வேண்டும். காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்றுவோம் என சொல்லி ஒன்றரை ஆண்டுகளாகியும் இன்னும் அகற்றவில்லை. எத்தனை ஆண்டுகளில் அகற்றப்படும் என்பதை மக்களுக்கு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் டெல்லியை நோக்கி முற்றுகை போராட்டத்தை கையில் எடுப்போம் என ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

வியாபாரிகள் சங்கம் சார்பில் மருத்துவ முகாம்

திருவொற்றியூர் வியாபாரிகள் சங்கம் சார்பில் பொது மருத்துவ முகாம் சங்க தலைவர் கஜபதி, பொது செயலாளர் குறிஞ்சி கணேசன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. முகாமினை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா தொடங்கி வைத்தார். முகாமில் பொது மருத்துவம், இருதயம், கண், பல், இ.சி.ஜி. சர்க்கரை நோய் பரிசோதனைகள் செய்யப்பட்டன.