வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்..!

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தயம் காலனி பகுதியில் அரசு புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்ட வீடுகளை நீதிமன்ற உத்தரவின்பேரில் ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில் தார் மனோஜ் முனியன் தலைமையில் வருவாய்த்துறையினர் இடித்து அகற்றினார்கள். அப்போது சில வீடுகளின் பிற பகுதிகள் சேதம் அடைந்ததாக தெரிகிறது. இதனால் தனி தாசில்தார் மனோஜ் முனியன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இதனைக் கண்டித்து கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறை கள்ளக்குறிச்சி தாசில்தாரை அரசியல் காரணங்களுக்காக பணியிடை நீக்கம் செய்ததை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் தாசில்தார் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக நேற்று வால்பாறை தாசில்தார் அலுவலகத்தில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல கோயம்புத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

உண்டு உறைவிட பள்ளியில் அத்தப்பூ கோலமிட்டு ஓணம் பண்டிகை கொண்டாட்டம்..!

கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறை பகுதியில் உள்ள மலையாள மொழி பேசும் மக்கள் கடந்த ஒரு வாரமாக தங்களது வீடுகளில் அத்தப்பூ கோலமிட்டு ஓணம் பண்டிகைக்கான தயாரிப்பு பணிகளை செய்து வந்தனர். நேற்று ஓணம் பண்டிகையை முன்னிட்டு அவர்களது பாரம்பரிய உடையணிந்து, அத்தப்பூ கோலமிட்டு வழிபாடு நடத்தினார்கள். பின்னர் தங்களது வீடுகளுக்கு அருகில் உள்ளவர்களை அழைத்து வடை பாயாசத்துடன் 16 வகையான சைவ உணவுகளை வழங்கி ஓணம் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.

வால்பாறை எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் உள்ள வால்பாறை சுற்று வட்டார பகுதியில் இருக்கும் மலைவாழ் கிராம மக்களின் பிள்ளைகள் படிக்கும் உண்டு உறைவிடப் பள்ளியில் மாணவ-மாணவிகள் ஓணம் உடையணிந்து அத்தப்பூ கோலமிட்டு ஓணம் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.