மாணவர்களின் வாயில் ‘டேப்’ விவகாரம்..! நடவடிக்கை கோரி மாவட்ட ஆட்சியர் மனு..!

அய்யம்பட்டி அரசு பள்ளியில் மாணவர்களின் வாயில் ‘டேப்’ ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெற்றோர் நேற்று புகார் அளித்தனர். தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே அரசுப் பள்ளியில் வகுப்பறையில் பேசாமல் இருப்பதற்காக மாணவர்களின் வாயில் ‘டேப்’ ஒட்டப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றமக்கள் குறைதீர் கூட்டத்தில், ஒரத்தநாடு அருகே உள்ள அய்யம்பட்டி கிராம மக்கள் அளித்த மனுவில், ஒரத்தநாடு ஒன்றியத்துக்கு உட்பட்ட அய்யம்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் கடந்த அக்டோபர் 21-ஆம் தேதி 4-ஆம் வகுப்பு படிக்கும் 5 மாணவர்களின் வாயில் செல்லோ டேப் ஒட்டி 2 மணி நேரமாக உட்கார வைத்துள்ள விவரம் தற்போது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் கேட்டதற்கு, அவர் உரிய பதில் அளிக்கவில்லை. எனவே, இதுபற்றி விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.