ரயில்வே அதிகாரிகளின் அலட்சியம்…! திக்கு முக்காடிய வாகன ஓட்டிகள்..!

கடலூர் மாவட்டம் வடலூர் பண்ருட்டி சாலையில் உள்ள ரயில்வே கேட் பராமரிப்பு பணிகள் காரணமாக மூடப்பட்டது. இன்று அதிகாலை ரயில்வே கேட் மூடப்பட்டதால் மாற்றுப் பாதையை தேடி வாகன ஓட்டிகள் திணறி வந்த நிலையில் பண்ருட்டியில் இருந்து வடலூர் நோக்கி வந்த இருசக்கர வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் ராகவேந்திரா சிட்டி சேராக்குப்பம் வழியாக வடலூர் நோக்கி சென்று வந்தது.

இரவு நேரத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமானதால் சேராக்குப்பம் அருகே உள்ள ரயில்வே கேட் பகுதியில் குறுகிய வளைவில் திரும்ப முடியாமல் தனியார் பேருந்து ஒன்று சிக்கி கொண்டது. இதனால் வாகன ஓட்டிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த சேராக்குப்பம் பகுதி இளைஞர்கள் பேருந்து ஓட்டுனருக்கு உதவி செய்து பேருந்தை ரயில்வே கேட்டை கடந்து செல்ல உதவினர். பேருந்து ரயில்வே கேட்ட அருகே சிக்கிக் கொண்டதால் பண்ருட்டி வடலூர் சாலையில் நீண்ட நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். பராமரிப்பு பணி காரணமாக ரயில்வே கேட் மூடப்படுகிறது என்று அறிவித்தும் காவல்துறையினர் முறையான போக்குவரத்து மாற்றங்களை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வாகன ஓட்டிகள் தெரிவித்தனர். மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட சூழ்நிலையில் காவல்துறை இல்லாததால் இளைஞர்கள் தானாக முன்வந்து போக்குவரத்தை சரி செய்தது வாகன ஓட்டிகள் மத்தியில் பாராட்டுகளை குவித்து வருகிறது.