கடலூர் மாவட்டம் வடலூர் அடுத்த கருங்குழி காலனி பகுதியை சேர்ந்த தெய்வசிகாமணி மகன் சக்திவேல். இவர் வடலூர் காட்டுகொல்லை ரயில்வே கேட் அருகே காய்கறி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கருங்குழி பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் சங்கர் என்பவருக்கும், சக்திவேலுக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த மாதம் 31 ஆம் தேதி, சங்கர் மற்றும் அவரது மகன்கள் சேர்ந்து சக்திவேலை ஆபாசமாக திட்டியும், அரிவாள் மற்றும் கட்டைகளைக் கொண்டு தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மண்டைய உடைந்து இரத்த வெள்ளத்தில் கிடந்த சக்திவேலை மீட்டு குறிஞ்சிப்பாடி மருத்துவமனைக்கு அவரது உறவினர்கள் சேர்த்து உள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சக்திவேல் வடலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்காததால், மன வேதனை அடைந்த சக்திவேல், தனக்கு நடந்த கொடுமையை பற்றி வீடியோ வெளியிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அந்த வீடியோவில், தன்னை அடித்து 16 நாள் ஆகிவிட்டதாகவும், வடலூர் காவல் நிலையத்தில் FIR போட்டீர்களா? என்று கேட்டதற்கு, நீ ஆளுங்கட்சி எதிர்த்து தான் வேலை செய்வாயா? வழக்கெல்லாம் போட முடியாது என்று கூறி துரத்தியதாக கூறுகிறார். அதன் பின்பு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதால், மீண்டும் தபால் மூலமாக புகார் அளித்ததாக கூறுகிறார். இது சம்பந்தமான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.