திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே ஏரி வேலூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் இவர் இன்ஸ்டாகிராமில் வந்த ஒரு லிங்கை கிளிக் செய்தார். அது நேராக ஒரு கடன் செயலிக்கு சென்றது. இதனால் தனது தேவைக்காக ராஜேஷ் கடன் வாங்கினார். இந்த நிலையில் வாங்கிய கடனை வட்டி, அசலுடன் கடந்த ஓராண்டுக்கு முன்பே திருப்பி கொடுத்துவிட்டாராம். ஆனாலும் ஆன்லைன் மூலம் கடன் வழங்கிய லோன் ஆப் நிறுவனத்தினர் வாட்ஸ் ஆப் மூலம் ராஜேஷை தொடர்பு கொண்டு மேலும் பணம் கேட்டு தொந்தரவு செய்ததாக தெரிகிறது.
இதையடுத்து வாட்ஸ் ஆப் வீடியோ கால் மூலம் வந்து ராஜேஷை வீடியோ எடுத்துக் கொண்டதாகவும் தெரிகிறது. இதைத் தொடர்ந்து ராஜேஷின் புகைப்படத்தை மார்பிங் செய்து அதை நிர்வாணமான ஒரு உடலுடன் ஒட்டி அதை காட்டியும் ராஜேஷை மிரட்டியுள்ளனர். ஆனால் ராஜேஷோ எல்லா பணத்தையும் கொடுத்த பிறகும் மீண்டும் எதற்காக பணம் கேட்கிறீர்கள். மீண்டும் பணம் கேட்டால் செலுத்த முடியாது என்றாராம். இதனால் ஆத்திரமடைந்த லோன் வழங்கிய நிறுவனத்தினர் ராஜேஷின் உறவினர்களுக்கெல்லாம் நிர்வாண புகைப்படத்தை அனுப்பினர்.
இதையடுத்து சொந்தக்காரர்கள் எல்லாம் ராஜேஷை ஒரு மாதிரியாக பேசியதாக கூறப்படுகிறது. இத்துடன் விடாமல் லோன் ஆப் நிறுவனம் நீ நாங்கள் கேட்கும் பணம் கொடுக்காவிட்டால் சமூகவலைதளங்களில் போட்டுவிடுவோம் என்றும் மிரட்டியதாக தெரிகிறது. இதனால் மன உளைச்சல் அடைந்த ராஜேஷ் பூச்சி கொல்லி மருந்தை குடித்துள்ளார். ராஜேஷை மீட்ட உறவினர்கள் தஞ்சை அரசு மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
அப்போது ராஜேஷை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து தகவலறிந்த வலங்கைமான் காவல்துறை ராஜேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் ராஜேஷ் பயன்படுத்திய செல்போனை ஆய்வு செய்து பார்த்ததில் அவருக்கு வந்த வாட்ஸ் ஆப் கால் அனைத்துமே தென்னாப்பிரிக்காவில் இருந்து வந்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறை விசாரணை நடத்தி வருகிறார்கள்.