லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரர் அன்மோல் பிஷ்னோய் அமெரிக்காவில் கைது..!?

கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரர் அன்மோல் பிஷ்னோய் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வைத்து கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளி வந்துள்ளது. மகாராஷ்டிரா முன்னாள் எம்எல்ஏ பாபா சித்திக் கொலை வழக்கு, சல்மான் கான் வீட்டில் துப்பாக்கி சூடு தொடர்புடைய லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரன் அன்மோல் பிஷ்னோயை அமெரிக்காவில் இருந்து இந்தியா கொண்டுவர மும்பை காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள சல்மான்கானின் வீட்டின் மீது கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். இது தொடர்பாக விக்கி குப்தா, சாகர் பால், அனுஜ்குமார் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் அனுஜ்குமார் காவல்துறை காவலில் தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையில் லாரன்ஸ் பிஷ்னாய் மற்றும் அவரது சகோதரர்கள் அன்மல் பிஷ்னாய் ஆகியோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு அன்மோல் பிஷ்னோய் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டார்.

தேசியவாத காங்கிரஸ் தலைவரும் முன்னாள் MLA -வுமான பாபா சித்திக்கை, கடந்த மாதம் 12-ஆம் தேதி 3 பேர் கொண்ட கும்பல் சுட்டுக்கொன்றது. இது தொடர்பாக இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலையின் பின்னணியில் குஜராத் சமர்பதி சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோய், அவரது சகோதரர் அன்மோல் பிஷ்னோய் இருப்பதாக மும்பை காவல்துறை சந்தேகிக்கின்றனர்.

மேலும் டெல்லி உட்பட நாட்டின் பல நகரங்களில் நடைபெற்ற கொடிய குற்றங்களில் இவர்களுக்கு தொடர்பு இருப்பதால் அன்மோல் பிஷ்னோயை கைது செய்ய உதவினால் ரூ. 10 லட்சம் பரிசு என தேசிய புலனாய்வு முகமை சமீபத்தில் அறிவித்தது.

இந்நிலையில் அன்மோல் பிஷ்னோய் அமெரிக்காவில் இருப்பதாக மும்பை காவல்துறைக்கு அமெரிக்க அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், இம்மாத தொடக்கத்தில், மும்பை காவல்துறையின் குற்றப்பிரிவு அவரை அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தும் பணியைத் தொடங்கியது. இத்தனை தொடர்ந்து அன்மோல் பிஷ்னோயை அமெரிக்காவில் இருந்து இந்தியா கொண்டு வர மும்பை காவல்துறை முடிவு செய்து இதற்கான அன்மோல் பிஷ்னோய் கைது செய்ய மகாராஷ்டிர சிறப்பு நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

மேலும் உலகளாவிய சட்ட அமலாக்க நிறுவனமான இன்டர்போல் மூலம் ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிடப்பட்டது. இதையடுத்து அன்மோல் பிஷ்னோயை இந்தியா அழைத்து வர தேவையான நடவடிக்கை எடுக்கும்படி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு மும்பை காவல்துறை வேண்டுகோள் விடுத்த நிலையில் லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரர் அன்மோல் பிஷ்னோய் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வைத்து கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளி வந்துள்ளது.

சல்மான் கானை விடாது துரத்தும் மான்..! சல்மான் கான் உயிருடன் இருக்க வேண்டுமா ரூ.5 கோடி கொடுங்க..!

நடிகர் சல்மான் கான் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில், அவருக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில், சல்மான் கான் உயிருக்கு ரூ.5 கோடி பேரம் பேசப்பட்டிருக்கிறது என மும்பை போக்குவரத்து காவல் பிரிவுக்கு மர்ம நபர்களால் மெசேஜ் அனுப்பப்பட்டு உள்ளது.

கடந்த 1998-ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் படப்பிடிப்பின்போது, அரிய வகை மானை வேட்டையாடியதாக சல்மான் கான் மீது குற்றச்சாட்டு இருக்கிறது. இதனை குறிப்பிட்டு, அவர் பிஷ்னோய் இன மக்களிடத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சிலர் வலியுறுத்தி வருகின்றனர். சல்மான் கான் செய்த குற்றத்திற்காக அவருக்கு உரிய தண்டனை வழங்கப்படும் என்று, மாஃபியா கும்பல் தலைவனான லாரன்ஸ் பிஷ்னோய் அறிவித்திருக்கிறார்.

இந்த அறிவிப்பையடுத்து, சல்மான் கான் வீட்டின் மீது துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்தன. அவருக்கு மிகவும் நெருக்கமானவராக கருதப்பட்ட மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சரான பாபா சித்திக் சமீபத்தில் கொல்லப்பட்டார். அவரை கொன்றது லாரன்ஸ் பிஷ்னோய் கேங்தான் என்று சொல்லப்படுகிறது. தற்போது லாரன்ஸ் குஜராத் சிறையில் இருந்தாலும், அங்கிருந்தவாரே அவரது ஆட்களை கொண்டு பல்வேறு குற்ற செயல்களை செய்து வருகிறார்.

இப்படிபட்ட சூழ்நிலையில், சல்மான் கானுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவாகியுள்ளார். இதனால் சல்மான் கானுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தாலும், இந்த அச்சுறுத்தலால் படப்பிடிப்புகளில் நிம்மதியாக பங்கேற்க முடியாத சூழல் உருவாகியுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், சல்மான் கான் உயிருடன் இருக்க வேண்டும் எனில் ரூ.5 கோடி வேண்டும் என்று மர்ம நபர்கள், மும்பை போக்குவரத்து காவல்துறைக்கு மெசேஜ் அனுப்பியுள்ளனர்.

மும்பை போக்குவரத்து காவல்துறையின் வாட்ஸ்அப் எண்ணுக்கு வந்த மெசேஜில், “லாரன்ஸ் பிஷ்னோய் உடனான பகையை முடிவுக்கு கொண்டு வந்து, சல்மான் கான் உயிருடன் இருக்க வேண்டும் எனில், ரூ.5 கோடி கொடுக்க வேண்டும். கொடுக்க தவறினால், பாபா சித்திக்கை விட சல்மான் கானின் நிலை மோசமடைந்துவிடும். இந்த அச்சுறுத்தலை சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்” என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

தாவூத் இப்ராஹிம் வழியில் லாரன்ஸ் பிஷ்னோய்..! சமூக வலைத்தளங்கள் மூலம் ஆட்கள் சேர்ப்பு..!

தேசிய புலனாய்வு முகமை உபா சட்டத்தின் கீழ் லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் கோல்டி பிரார் ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது மேலும் NIA லாரன்ஸ் பிஷ்னோய் குழுவை தாவூத் இப்ராஹிமின் டி-கம்பெனி உடன் NIA ஒப்பிட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை மகாராஷ்டிர மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு லாரன்ஸ் பிஷ்னோய் குழு பொறுப்பேற்றது. அவரது குழு இந்தியாவில் 11 மாநிலங்களில் சுமார் 700 துப்பாக்கி பயிற்சி பெற்ற ஷூட்டர்களை கொண்டு இயங்குவதாக NIA தெரிவித்துள்ளது. சிறிய அளவில் தொடங்கி அவரது குழு மிகப்பெரிய அளவில் விரிவடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

அதன் மூலம் வட இந்தியாவில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார். அவரது குழுவை சத்விந்தர் சிங் என்கிற கோல்டி பிரார் இயக்கி வருகிறார். அவர் கனடா மற்றும் இந்திய அளவில் தேடப்படும் குற்றவாளி. பிஷ்னோய் குழுவில் உள்ள 700 பேரில் 300 பேர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள்.

சமூக வலைத்தளங்கள் மூலம் தங்கள் குழுவுக்கு ஆட்களை சேர்க்கும் முயற்சியை அவர்கள் மேற்கொண்டு வருகிறார்கள் என NIA குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளது. மிரட்டி பணம் பறிப்பது அவர்களது குழுவின் பணியாக உள்ளது. அப்படி பெறப்படும் கோடிக்கணக்கான பணத்தை ஹவாலா மூலம் மாற்றியுள்ளனர். பஞ்சாப், மகாராஷ்டிரா, ஹரியானா, ராஜஸ்தான், டெல்லி, உத்தர பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

யார் இந்த லாரன்ஸ் பிஷ்னோய்…!?

மகாராஷ்டிராவில் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பாபா சித்திக் பிரமுகர் பாபா சித்திக் கொலை செய்யப்பட்டதற்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.

இது தொடர்பாக அக்கும்பலைச் சேர்ந்த ஒருவர் பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்த பதிவு வைரலாகியுள்ளது. அதில், “பாலிவுட் நடிகர் சல்மான் கான் மற்றும் நிழல் உலக தாதாக்கள் தாவூத் இப்ரஹிம், அனுஜ் தாப்பன் ஆகியோருடன் கொண்ட தொடர்பின் காரணமாகவே பாபா சித்திக் கொல்லப்பட்டார். எங்களுக்கும் சித்திக்குக்கும் இடையே தனிப்பட்ட விரோதம் ஏதும் இல்லை.

சல்மான் கான் அல்லது தாவூத் குழுவுக்கு யாரெல்லாம் உதவுகிறார்களோ அவர்கள் இத்தகைய தாக்குதலுக்கு உள்ளாக வேண்டியிருக்கும். தயார் ஆகிக் கொள்ளுங்கள். எங்களின் சகோதரர்கள் கொல்லப்பட்டால் நாங்கள் பதிலடி கொடுப்போம். நாங்கள் எப்போதுமே முதலில் தாக்குவதிலை” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1976 முதல் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக இருந்த 66 வயதான பாபா சித்திக் மூன்று முறை எம்எல்ஏ-வாக தேர்வு செய்யப்பட்டு அமைச்சராக பணியாற்றி உள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் பாபா சித்திக் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்து கொண்டார். இந்நிலையில், நேற்று நிர்மல் நகரில் உள்ள அவரது மகனின் அலுவலகத்துக்கு வெளியில் இருந்த போது துப்பாக்கிச் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பஞ்சாபின் பெரோஸ்பூரை சேர்ந்த லாரன்ஸ் பிஷ்னோய் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்துள்ளார். கல்லூரி காலங்களில் மாணவர் பேரவை அரசியலில் தலையிட்டவருக்கு கோல்டி பிரார் எனும் சத்தீந்தர் சிங் நண்பராக மாறினார். 2010-ல் பட்டம் பெற்ற பின் சண்டிகரில் இருவரும் இணைந்து பல்வேறு குற்றங்களில் ஈடுபடத் துவங்கினர். இருவர் மீதும் கொலை முயற்சி, கொள்ளை, வழிப்பறி போன்ற 7 வழக்குகள் 2012 வரை பதிவாகி பிஷ்னோய் சிறையில் அடைக்கப்பட்டார்.

அங்கிருந்த சக கைதிகளின் நட்பை பெற்ற லாரன்ஸ் பிஷ்னோய் விடுதலையாகி ஆயுதக் கடத்தலில் இறங்கினார்.தன்னுடன் மோதிய முக்ஸ்தர் என்பவரை லாரன்ஸ் பிஷ்னோய் சுட்டுக் கொலை செய்யும் அளவிற்கு சிறை வாழ்க்கையில் லாரன்ஸ் பிஷ்னோய் தாதாவாக மாற்றியது.

பிறகு மது கடத்தலிலும் இறங்கியவர் தன் தலைமையில் ஒரு கும்பலை உருவாக்கினார். 2014-ல் ராஜஸ்தான் காவல்துறையிஇனருடனான என்கவுன்ட்டரில் மீண்டும் கைதான லாரன்ஸ் பிஷ்னோய் மீது சிறையினுள் முக்கிய சாட்சியை கொலை செய்த வழக்கும் பதிவானது. சிறையில் சம்பத் நெஹரா எனும் குற்றவாளியுடன் நட்பு கொண்டு தனது கும்பலின் நடவடிக்கைகளை ராஜஸ்தானிலும் பரப்பினார்.

பிஷ்னோய் சமூகத்தினர் மான் உள்ளிட்ட விலங்குகளை புனிதமாகக் கருதுபவர்கள். கடந்த 1998-ஆம் ஆண்டு, ஜோத்பூரில், அரியவகை மான் ஒன்றை வேட்டையாடிய வழக்கில் சல்மான் கானுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. சல்மான் கான் இப்போது ஜாமீனில் இருக்கிறார்.

அந்த மான், தங்கள் சமூகத்தின் புனித விலங்கு என்பதால் அதற்குப் பழிவாங்கும் வகையில் சல்மான் கானை கொல்வோம் என்று பஞ்சாப்பை சேர்ந்த பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கொலை மிரட்டல் விடுத்திருந்தார். லாரன்ஸ் பிஷ்னோய் குழுவில் ஒருவரான கோல்டி ப்ரார், கடந்த வருடம் பகிரங்கமாகவே மிரட்டல் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.