நாமக்கல் மாவட்டத்தில் மதுபான சந்து கடைகள்… லாட்டரி சீட்டுகள் அதிக அளவில் விற்பனை..!!
நாமக்கல் மாவட்டத்தில் ஆட்சியர் ச.உமா அவர்களின் தலைமையில் விவசாயிகளின் குறைதீர்க்கும் கூட்டம் 30 -06-2023 (வெள்ளிகிழமை) நடைபெற்றது. இதில்,கடந்த கூட்டத்தில் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட அனைத்து மனுவிற்கும் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
அப்பொழுது அரசு மதுபான கடைகளுக்கு அருகில் சந்து கடைகள் இருப்பதாக அதிக அளவில் புகார்கள் விவசாயிகள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து கூட்டத்தில் இருந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜூ இது குறித்து வழக்கு போடப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் இதற்கு மட்டும் 300 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் இது தொடர்புடைய 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் இப்பொழுது சந்து கடைகள் எதுவும் இல்லை என்று காவல் கண்காணிப்பாளர் ராஜூ தெரிவித்தார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த திருச்செங்கோடு எம்எல்ஏ ஈ.ஆர் . ஈஸ்வரன் மேலும் பேசுகையில், காவல்துறை கூறியது போன்று சந்து கடைகள் எதுவும் மூடப்படவில்லை அதற்கு மாறாக அது அதிகரித்த வண்ணமே உள்ளது மற்றும் அதிக அளவில் லாட்டரி சீட்டுகளும் விற்கப்படுகின்றது என்று அவர் கூறினார்.
இதுமட்டுமின்றி, கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் புகையிலை பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகின்றது என்று தெரிவித்தனர் . இது குறித்து காவல் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தால் தங்களை மிரட்டுவதாகவும் விவசாயிகள் கூறினர்.
மேலும் நாமக்கல் மாவட்டத்தின் ஆட்சியர் ச.உமா அவர்கள் உடனடியாக விவசாயிகளின் குறைகள் அனைத்தும் தீர்க்கப்பட வேண்டும் என்று காவல் துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.