இன்றைய அவசர உலகில் மக்கள் சத்தான உணவு பொருட்களை கடைகளுக்கு சென்று வாங்கும் நிலை கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து செல்போன் மூலமாக ஆடர் செய்து வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி வந்தனர். அதன்பின்னர் ஆன்லைன் வியாபாரம் சூடு பிடிக்க மருந்து, மாத்திரை, ஆடைகள் மற்றும்மல்லாமல் சூடான உணவு பொருட்களையே ஆன்லைனில் ஆடர் செய்து வாங்கி சாப்பிடும் அளவிற்கு கால சக்கரம் சுழன்றுள்ளது.
நாடு முழுவதும் இந்த ஆன்லைன் வியாபாரம் பல தரப்பட்ட பிரச்சனைகளை உருவாக்கி பேசு பொருளாகிறது. அதன் வரிசையில் உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் பட்டியலினத்தவர் எனக்கூறி ஜோமாட்டோ ஊழியரிடம் உணவு வாங்க மறுத்து அவரை தாக்கி முகத்தில் எச்சில் துப்பிய கொடுமையான சம்பவம் இன்று பேசு பொருளாகியுள்ளது
உத்தர பிரதேசம் மாநிலம் தலைநகரான லக்னோவில் வினித் குமார் என்பவர் ஆன்லைன் உணவு வினியோகம் செய்யும் ஜோமாட்டோ நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் லக்னோவில் வசித்து வரும் ஒருவர் உணவு ஆர்டர் செய்தார். இதையடுத்து அந்த ஆர்டரை வினித்குமார் பெற்று கொண்டார்.
இதையடுத்து ஓட்டலில் அவர் உணவு வாங்கி கொண்டு ஆர்டர் செய்த நபரின் வீட்டுக்கு சென்றார். அங்கிருந்த நபரிடம் வினித் குமார் உணவு வழங்கினார். அப்போது அந்த நபர் வினித் குமாரின் பெயர், ஜாதியை கேட்டுள்ளார். இதனை வினித் குமார் கூற மறுத்துள்ளார். இருப்பினும் வினித் குமாரின் ஜாதியை அறிந்த அந்தநபர் பட்டியலினத்தவர் எனக்கூறி அவரிடம் உணவை வாங்க மறுத்துள்ளார்.
மேலும் உணவை அங்கிருந்து கொண்டு செல்லும்படி அவர் வலியுறுத்தி தீண்டாமையை கடைப்பிடித்துள்ளார். மேலும் வினித் குமார் ஆர்டரை ரத்து செய்யும்படி அவரிடம் கூறியுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த அந்த நபர் வினித் குமாரின் முகத்தில் எச்சில் துப்பியுள்ளார். மேலும் வீட்டில் இருந்து வெளியே வந்த அவர் சில நபருடன் சேர்ந்து வினித் குமாரை தாக்கியுள்ளார்.
மேலும் மோட்டார் சைக்கிளை பிடுங்கி வைத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த வினித்குமார் உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். அங்கிருந்து விரைந்து வந்த காவல்துறையினர் இரு சக்கர வாகனத்தை பெற்று கொண்டு, வினித்குமாரையும் மீட்டனர். பசிக்கு உணவு டெலிவரி செய்த ஜோமாட்டோ ஊழியரிடம் ஜாதியை கேட்டு தீண்டாமையை கடைப்பிடித்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.