ரோஜா கண்காட்சியில் சுற்றுலா பயணி புகைப்படம் மற்றும் செல்பி மகிழ்ச்சி

நாளையுடன் முடிவடையும் ஊட்டி ரோஜாப் கண்காட்சியில் சுற்றுலா பயணி புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். நீலகிரி மாவட்டம் ஊட்டி ரோஜாப் பூங்காவில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் ஆண்டுதோறும் கோடை விழா நடத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக ஊட்டி ரோஜாப் பூங்காவில் கண்காட்சியும் நடைபெறும்.

அதன்படி, தோட்டக்கலைத் துறை சார்பில் 20-வது ரோஜா கண்காட்சி ஊட்டி ரோஜாப் பூங்காவில் நேற்று தொடங்கியது. அரசு தலைமைக் கொறடா கா.ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா, தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை இயக்குநர் குமாரவேல் பாண்டியன் ஆகியோர் கண்காட்சியைத் தொடங்கி வைத்தனர்.

கண்காட்சியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு அலங்காரங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. 80 ஆயிரம் பல வண்ண ரோஜா மலர்களை கொண்டு இரு டால்பின்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பல ஆயிரம் ரோஜா மலர்களை கொண்டு பென்குயின், சிப்பி, நத்தை, மீன், கடல் குதிரை, நீலத்திமிங்கலம், ஸ்நைல், நட்சத்திர மீன், கடல் கன்னி, உள்பட பல்வேறு வடிவங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

இதுதவிர வெளி மாவட்டங்களைச் சேர்ந்த தோட்டக்கலைத்துறையினர் 10-க்கும் மேற்பட்ட குடில்களில் பல வகையான மலர் அலங்காரங்களை செய்து வைத்துள்ளனர். மேலும் 40 வகையான 4 ஆயிரம் ரோஜா செடிகளில் பலவண்ண மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. கண்காட்சியை காண நேற்று ஏராளமான சுற்றுலாபயணிகள் திரண்டனர்.

இன்று 2-வது நாளாக கண்காட்சி நடந்தது. இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அதிகாலையிலேயே சுற்றுலாபயணிகள் குவிந்தனர். அவர்கள் அங்கு பூத்து குலுங்கிய ரோஜா பூக்களை பார்த்து ரசித்தனர். மேலும் ரோஜாக்களால் செய்யப்பட்ட மலர் அலங்காரங்கள் முன்பு நின்று அவர்கள் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.