மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக சென்று ரீல்ஸ் வெளியிட்ட இளைஞர்களின் மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக சென்று ரீல்ஸ் வெளியிட்ட 3 இளைஞர்களும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம், அந்த 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னையில் இருந்தோ, பெங்களூரில் இருந்தோ, கேரளா செல்ல வேண்டும் என்றால் கோயம்புத்தூரை கடந்து தான் போக வேண்டும். சேலம்-கொச்சி சாலை கோயம்புத்தூர் வழியாக செல்கிறது. இந்த சாலை சில இடங்களில் 6 வழிச்சாலையாகவும், சில பகுதியில் 4 வழிச்சாலையாகவும் உள்ளது. அவினாசி முதல் கோயம்புத்தூர் நீலம்பூர் வரை எந்த இடையூறும் எந்த இடத்திலும் இல்லாத காரணத்தால் சராசரியாக 80 கிமீ முதல் 100 கிமீ வேகத்தில் கூட போக முடியும்.

இந்த சேலம்-கொச்சி சாலையில் கோயம்புத்தூர் மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே 3 இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக சென்றபடி ரீல்ஸ் வீடியோ எடுப்பதாகவும், அது மற்ற வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக இருப்பதாகவும் கருமத்தம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. உடனே அங்கு விரைந்த சென்ற காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது பைக்கில் அதிவேகமாக சென்று ரீல்ஸ் எடுத்தபடி 3 வாலிபர்கள் வந்தனர். உடனே காவல்துறையினர் அந்த 3 பேரையும் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் திருப்பூரை சேர்ந்த சஞ்சய், டிக்சன் மற்றும் கோயம்புத்தூர் அருகே மலுமிச்சம்பட்டியை சேர்ந்த தமிழ் என்பதும், அவர்கள் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்று ரீல்ஸ் எடுத்தது தெரிந்தது. உடனே காவல்துறையினர் அந்த 3 பேருக்கும் அபராதம் விதித்தனர். மேலும் அந்த 3 பேரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று அறிவுரை வழங்கினர். இதைத் தொடர்ந்து அந்த 3 பேரும் அபராத தொகையை செலுத்தி விட்டு காவல் நிலையத்தில் இருந்து புறப்பட தயாரானார்கள்.

இதற்கிடையே அந்த 3 பேரும் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தை விட்டு வெளியே வருவது போன்றும், அவர்கள் மோட்டார் சைக்கிளில் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களுக்கு இடையே அதிவேகமாக செல்வது போன்ற ரீல்ஸை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளத்தில் மீண்டும் பதிவேற்றம் செய்தனர். அதை பார்த்த காவல்துறை அதிர்ச்சி அடைந்தனர். மேலும் காவல் நிலையம் முன்பு நிற்பதுபோன்றும், மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக செல்வது போன்றும் ரீல்ஸ் வெளியான நிலையில், பலரும் விமர்சிக்க தொடங்கினார்கள்.

இதைத் தொடர்ந்து அந்த 3 பேரையும் காவல் நிலையம் வரவழைத்தனர். இதைத்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக சென்று ரீல்ஸ் வெளியிட்டதற்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து, அந்த 3 பேரின் மோட்டார் சைக்கிள்களையும் காவல்துறை பறிமுதல் செய்தார்கள். மேலும் அவர்கள் 3 பேரிடமும் இனி மேல் சாலைகளில் அதிகவேகமாக சென்று ரீல்ஸ் எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடுமையாக எச்சரித்தனர்.

அரைகுறை ஆடையுடன் ரீல்ஸ் பெண்களின் புகைப்படத்தை பயன்படுத்தி கல்லாக்கட்டிய ஆசாமி..!

சென்னையில் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்து கொடுக்கும் வேலை செய்யும் பெண் ஒருவர், சென்னை அண்ணா நகர் சைபர் கிரைமில் புகார் ஒன்றை அளித்தார். தனது படத்தை பயன்படுத்தி, பாலியல் தொழில் செய்யும் பெண் என குறிப்பிட்டு சிலர் சமூகவலைதளம் மூலம் ஆண்களிடம் பணம் வசூலிப்பதாக தெரிவித்தார்.

பெண்ணின் புகாரில் பேரில் சம்பந்தப்பட்ட சமூகவலைதளத்தில் சாட் செய்தபோது, அந்த போலி பெண் ஐடி, ‘ஆபாசமாக புகைப்படம் அனுப்ப வேண்டும் என்றால் ரூ.500, வீடியோ காலில் நிர்வாணமாக வர வேண்டும் என்றால் ரூ.800, தனியாக அறையில் உல்லாசமாக இருக்க ரூ.3000 செலுத்தினால் வருவேன்’ என குறிப்பிட்டது.

பணம் செலுத்துவதற்கான ஜிபே க்யூஆர் கோடை மெசஞ்சர் மூலமாக அனுப்பினர். இதைப் பயன்படுத்தி பணப்பரிவர்த்தனை செய்ய உருவாக்கப்பட்ட வங்கிக் கணக்கில் இணைக்கப்பட்ட செல்போன் ஒன்று என்பதை காவல்துறை கண்டுபிடித்தனர். இதனை அடுத்து இந்த செல்போன் எண்ணை வைத்து சைபர் கிரைம் போலி சமூக வலைதளக் கணக்கை வைத்து மோசடி செய்யும் நபரை தேடிவந்தனர்.

இந்நிலையில், கிருஷ்ணன் என்ற இளைஞர் இந்த வேலைகளை செய்து வருவதாக தெரிய வந்தது. மேலும் விழுப்புரம் மரக்காணம் பகுதியில் அவர் இருப்பதாக வந்த தகவலை அடுத்து செல்போன் நெட்வொர்க் மூலம் பெண் ஆய்வாளர் சாந்திதேவி தலைமையில் தனிப்படை காவல்துறை அவரை கைது செய்தனர்.

கிருஷ்ணனின் செல்போனை ஆய்வு செய்வதில் பல பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போலி ஐடிகளை உருவாக்கி பல ஆண்களை ஏமாற்றி உள்ளது தெரிந்தது. பலரை இதுபோல் ஏமாற்றி லட்சக்கணக்கில் பணம் பறித்ததும் தெரியவந்தது. கிருஷ்ணன் பயன்படுத்திய போலி சமூக வலைதள கணக்குகளை ஆய்வு செய்தபோது அதில் அரைகுறை ஆடையோடு ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட பெண்களின் புகைப்படத்தை கிருஷ்ணன் பயன்படுத்தி போலி ஐடிக்களை உருவாக்கியது தெரிய வந்துள்ளது.