பணம் இரட்டிப்பாக தருவதாக கூறி ரூ.8.14 கோடி மோசடி..!

நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 9 பேர் சேர்ந்து ‘ரியல் ட்ரீம்ஸ் குழுமம்’ என்ற பெயரில் 2013-ம் ஆண்டு நிதி நிறுவனம் தொடங்கியுள்ளனர். இதன்மூலம், நாகப்பட்டினம் மாவட்டத்தில் மீனவ கிராமங்களில் உள்ள மீனவர்களிடம் நிதி வைப்பு சேமிப்பு திட்டங்களை நடத்துவதாகவும், 5 ஆண்டுகள் மாதந்தோறும் ரூ.500 அல்லது ரூ.1,000 கட்டினால், 5 ஆண்டுகள் முடிவில் இரட்டிப்புத் தொகை கிடைக்கும் என கூறி, 2013-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை ரூ.8.14 கோடி வசூல் செய்துள்ளனர்.

அதன்பின், 5 ஆண்டுகள் முடிந்து இரட்டிப்பு தொகையை கேட்டபோது, அவர்கள் உரிய பதிலளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டை திடீர் குப்பத்தைச் சேர்ந்த எம்.தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட 13 பேர், பண மோசடி செய்த நிதி நிறுவனத்தைச் சேர்ந்த நிர்வாக இயக்குநர் மற்றும் இயக்குநர்கள் 9 பேர் மீது சட்ட நடவடிக்கை எடுத்து, தங்களுடைய முதலீட்டு பணம் ரூ.8.14 கோடியை மீட்டுத்தர வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதையடுத்து, பண மோசடியில் ஈடுபட்ட 9 பேரையும் கைது செய்து, உரிய விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி உயர் நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டது. உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில், நாகப்பட்டினம் வெளிப்பாளையம் போலீஸார் ஆகஸ்ட் 8-ம் தேதி வழக்குப் பதிவு செய்தனர்.

தொடர்ந்து, ரியல் ட்ரீம்ஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் புதுச்சேரியைச் சேர்ந்த முகமது அலி, இயக்குநர்கள் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த பி.ஆறுமுகம். ஆர்.கோவிந்தராஜ், தமிழ்வாணன் மற்றும் காரைக்காலைச் சேர்ந்த கா.பிரபாகரன், வி.பழனிவேல், பி.கலியபெருமாள், சி.கனகராஜ், ஜி.ராஜாமூர்த்தி ஆகிய 9 பேரை காவல்துறை தேடி வருகின்றனர்.