குழந்தை திருமணம் நடந்தால் திருமண மண்டப உரிமையாளர் மீது நடவடிக்கை

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் காவல் நிலையத்தில், குழந்தை திருமணத்தை தடுப்பது குறித்து திருமண மண்டப உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு காவேரிப்பாக்கம் காவல்துறை ஆய்வாளர் மணிமாறன் தலைமை தாங்கி பேசினார். அப்போது பெண்ணிற்கு 18 வயது பூர்த்தி அடைந்துள்ளதா என்பதை பார்க்க வேண்டும்.

மேலும் மண்டப உரிமையாளர்கள் பெண்ணின் வயதை உறுதி செய்ய கல்வி சான்றிதழ், ஆதார் அட்டை உள்ளிட்டவற்றை சரிபார்க்க வேண்டும். அவ்வாறு சரிபார்க்காமல் குழந்தை திருமணம் ஏதாவது நடைபெறுவது கண்டுபிடிக்கப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். கூட்டத்தில் சுமார் 10-க்கும் மேற்பட்ட மண்டப உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.

மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் 108-ல் கர்ப்பிணிக்கு ‘ஆண் குழந்தை’

ராணிப்பேட்டை மாவட்டம், காட்பாடி தாலுகா பரமசாத்து கிராமத்தை சேர்ந்த பிரபாகரன், தொழிலாளி இவருடைய மனைவி ராசாத்தி. நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து 108 வரவழைத்து ராசாத்தியை அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மேல்பாடி அருகே சென்றபோது பிரசவவலி அதிகரித்தது.

அதனால் ஓட்டுநர் ராஜேஷ்குமார் 108 யை ஓரமாக நிறுத்தினார். அதைத்தொடர்ந்து ராசாத்திக்கு, மருத்துவ உதவியாளர் செண்பகம் பிரசவம் பார்க்க ராசாத்திக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதன்பின்னர் தாயும், குழந்தையும் மேல்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.