லஞ்சம் வாங்குபவன் கையை வெட்டனும், ஊழல் பன்றவன தூக்குல போடனும், அரசியல் ஒரு சாக்கடை என்ற வீர வசனங்கள் பேசிக்கொண்டு சாமர்த்தியம் என்ற பெயரில் எப்படி வேண்டுமானாலும் பிழைத்துக் கொள்ளலாம் என்ற யதார்த்தத்தில் அறத்தைப் பற்றிய எந்த கவலையும் இல்லாமல் திருக்குறள் உலகப் பொதுமறை, திருவள்ளுவர் என் முப்பாட்டன் என மார்தட்டிக் கொள்ளும் நாம் இன்று அரசு எந்திரத்தின் அனைத்து மட்டங்களிலும் லஞ்சமும், ஊழலும் தலைவிரித்து ஆடுகின்றன. அரசாங்க அலுவலகத்தில் பணியாற்றும் கடை நிலை ஊழியரில் தொடங்கி, மிக உயர் பதவிகள் வகிப்பவர்கள் வரை பல்வேறு மட்டங்களிலும் லஞ்சம் தலைவிரித்து ஆடிக்கொண்டுள்ளது.
பத்திரப்பதிவு, வருவாய்த்துறைகளிலேயே, அளவுக்கு அதிகமாக பணம் புழங்கக்கூடிய துறையாக விளங்குகிறது. எனவே, இந்த துறையில் லஞ்ச புகார்கள் குவிந்து கொண்டிருக்க, லஞ்சம் வாங்கும் அதிகாரிகளும் கைதாகி கொண்டே இருப்பது தொடர்கதையாக ஒன்றாகும். ஆனால், கடந்த காலங்களில் மின்துறையிலும் பெருக்கெடுத்து ஓடி தொடங்கியுள்ளது.
இதன் ஒரு தொடர்ச்சியாக, திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பகுதியில் ஒரு அதிகாரி லஞ்சம் வாங்கி கைதாகி இருந்தார். அதாவது நாராயணசாமி என்பவரின் மனைவி இறந்துவிட்ட நிலையில், முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஈமச்சடங்கு மற்றும் இயற்கை மரண உதவித்தொகை ரூ.22,500 பெற போளூர் சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு தாக்கல் செய்தார்.
திருவண்ணாமலை, கொழாவூர் VAO ராஜேந்திரன், நாராயணசாமிக்கு போனை போட்டு, ரூ.1,500 லஞ்சம் கொடுத்தால்தான் ஈமச்சடங்கு மற்றும் இயற்கை மரண உதவித்தொகை ரூ.22,500 பெறும் மனுவிற்கு ஒப்புதல் வழங்க ஏற்பாடு செய்வேன் என்றாராம். இதையடுத்து, நாராயணசாமி திருவண்ணாமலை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் தந்ததையடுத்து, கிராம உதவியாளர் ராஜேந்திரனை லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் கைது செய்தனர்.
அது ஒருபுறமிருக்க கிருஷ்ணகிரியில், அஞ்செட்டியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர், ஓசூர் பேகேப்பள்ளி பிருந்தாவன் கார்டன் பகுதியில் சொந்தமாக வீடு கட்டி வருகிறார். இதற்கு மின் இணைப்பு கேட்டு, சிப்காட் மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அதை பரிசீலனை செய்த, மின்வாரிய உதவி பொறியாளர் சிவகுரு, வணிக கட்டிட ஆய்வாளர் பிரபாகரன் இருவரும், புதிய வீட்டிற்கு சென்று பார்த்து விட்டு, புதிய இணைப்பு வழங்க, 35,000 ரூபாய் லஞ்சம் வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.
இதனால் 5,000 ரூபாயை ராஜேந்திரன் முதல் கட்டமாக தந்துள்ளார். ஆனால், மிச்சமுள்ள பணத்தை வழங்க விரும்பாத அவர், மாவட்ட லஞ்ச ஒழிப்புதுறையில் புகார் செய்தார். துணைக் காவல் கண்காணிப்பாளர் நாகராஜ் தலைமையிலான லஞ்ச ஒழிப்புதுறை, ரசாயனம் தடவிய, 30,000 ரூபாயை, ராஜேந்திரனிடம் கொடுத்து அனுப்பினார்கள்.
அந்த பணத்தை சிப்காட் மின்வாரிய அலுவலகத்திற்கு கொண்டு சென்ற ராஜேந்திரன், அங்கிருந்த உதவி பொறியாளர் சிவகுரு மற்றும் துணைக் காவல் கண்காணிப்பாளர் பிரபாகரன் ஆகியோரிடம் பணத்தை வழங்கினார். அதை வாங்கி கொண்ட அவர்கள், இந்த பணம் போதாது, மொத்தம், 2 லட்சம் ரூபாய் வேண்டும் என்று கேட்டார்களாம். இவ்வளவையும் அங்கு மறைந்திருந்து கவனித்து கொண்டிருந்த லஞ்ச ஒழிப்புதுறையினர், இரண்டு பேரையும் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவம் கிருஷ்ணகிரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.