ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தஸ்தகீர் – அஜிஸா தம்பதியரின் ஒன்றரை வயது ஆண் குழந்தைக்கு கடந்த ஓராண்டாக தலையில் ரத்தக்கசிவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்ற போதிலும் சரி ஆகாததால் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் தங்கள் குழந்தையை அவர்கள் அனுமதித்துள்ளனர்.
இதனிடையே, சில தினங்களுக்கு முன்பு குழந்தைக்கு மருந்து ஏற்றுவதற்காக கையில் டிரிப்ஸ் போடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, குழந்தையின் வலது கை அழுகத் தொடங்கியது. தவறான டிரிப்ஸ் போட்டதே இதற்கு காரணம் என குழந்தையின் பெற்றோர்கள் குற்றம்சாட்டினர். இதுதொடர்பாக குழந்தையின் பெற்றோர்கள் மருத்துவமனை வாசலில் போராட்டம் நடத்தினர். இதனால் இந்த விவகாரம் பூதாகரமாகியது.
இதையடுத்து, அந்தக் குழந்தை எழும்பூர் குழந்தைகள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அந்தக் குழந்தையின் அழுகிய கையை அகற்ற முடிவு செய்யப்பட்டது. அதன்படி, சுமார் 2 மணிநேர அறுவை சிகிச்சை மூலம் குழந்தையின் கை அகற்றப்பட்டது. ஒன்றரை வயதே பிஞ்சுக் குழந்தையின் கை அகற்றப்பட்டது தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.