காவல்துறையினரை தாக்கிய போதை ஆசாமிகள்..!

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் வெல்கம் பார் அருகில் காவல்துறையினரை தாக்கிய போதை ஆசாமிகள். விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் அருகேயுள்ள நேரு சிலை அருகில் அமைத்துள்ள டாஸ்மாக் கடையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு மது அருந்தியவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு 6 பேர் கொண்ட கும்பல் இசக்கி என்பவரைத் தாக்கி உள்ளனர்.

இதனால் காயம் அடைந்த இசக்கி, ரத்தக் காயங்களுடன் ராஜபாளையம், வடக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில், இசக்கியைத் தாக்கிய நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்துள்ளார். இந்த விசாரணையில் 6 பேர் கொண்ட கும்பல் நேரு சிலை பின்புறம் இருக்கும் மற்றொரு தனியார் மதுபானக் கூடம் அருகே இருந்தது காவல்துறையினருக்கு தெரிய வந்தது.

Video Player

இதனையடுத்து, அவர்களிடம் விசாரணை நடத்த வடக்கு காவல் நிலைய காவலர்களான ராம்குமார் மற்றும் கருப்பசாமி ஆகியோர் சென்று நாளை காலை விசாரணைக்கு காவல் நிலையம் வருமாறு தெரிவித்து உள்ளனர். ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்த அந்தக் கும்பல் காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

ஒரு கட்டத்தில், காவலர் கையில் இருந்த லத்தியைப் பிடுங்கி அவரையேத் தாக்க தொடங்கி உள்ளனர். இதைத் தடுக்கச் சென்ற மற்றொரு காவலரையும் அந்தக் கும்பல் சரமாரியாக தாக்கினர். இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.