நாகர்கோவில் பார்வதிபுரத்தை சேர்ந்த விஷால் கிருஷ்ணன் ஒரு தேங்காய் வியாபாரி. இவரிடம் கோயம்புத்தூர் காந்திபுரம் 100 அடி ரோடு ராஜூ நாயுடு தெருவை சேர்ந்த அன்வர் சதாத் என்பவர் கடந்த ஆகஸ்டு மாதம் 17 ஆயிரம் கிலோ தேங்காய் வாங்கினார். அந்த தேங்காய்க்கு அன்வர் சதாத் முதல்கட்டமாக ரூ.3 லட்சம் கொடுத்தார்.
பின்னர் ரூ.10 லட்சத்து 26 ஆயிரத்து 846, ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்து 75 என 2 காசோலைகளை கொடுத்தார். அந்த காசோலைகளை விஷால் கிருஷ்ணன் வங்கியில் செலுத்தினார். ஆனால் அன்வர் சதாத்தின் வங்கி கணக்கில் போதிய பணம் இல்லாததால் காசோலைகள் திரும்பி விட்டன. ஆகையால், விஷால் கிருஷ்ணன், அன்வர் சதாத்தை தொடர்பு கொண்டு பணம் கொடுக்கும்படி கூறினார். உடனே அவர் ரூ.74 ஆயிரம் மட்டும் கொடுத்தார். மீதி ரூ.11 லட்சத்தை கொடுக்க வில்லை.
அதைத்தொடர்ந்து விஷால் கிருஷ்ணன், பலமுறை தொடர்பு கொண்டு கேட்டும் அன்வர் சதாத் உரிய பதில் அளிக்காமல் காலம் கடத்தி உள்ளார். இதனால் ஏமாற்றம் அடைந்த விஷால் கிருஷ்ணன், ரத்தினபுரி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் தேங்காய் வாங்கி ரூ.11 லட்சம் மோசடி செய்த அன்வர் சதாத் மீது மோசடி, நம்பிக்கை மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காவல் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.