22 வயதில் ஐ.பி.எஸ் அதிகாரி..! 28 வயதில் ராஜினாமா..!?

தமிழ் சினிமாவில் சிங்கம் படம் வெளி வந்த பிறகு சிறப்பாக பணியாற்றும் காவல் அதிகாரிகளை “சிங்கம்” என்று அழைக்க ஆரம்பித்துவிட்டனர். அதுவே பெண் காவல் அதிகாரி என்றால் “லேடி சிங்கம்” என்று அழைத்தனர். அதுவும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் என்றால் ஒரு தனி மரியாதை, யு.பி.எஸ்.சி தேர்வில் தேர்ச்சி பெறுவது என்பதே பெரிய சவாலான காரியம்.

இப்படி ஒரு சூழலில் பீகாரில் காவல் அதிகாரியாக பணியாற்றும் காம்யா மிஸ்ரா தனது 22 வயதில் முதல் முயற்சியிலேயே தனது யு.பி.எஸ்.சி தேர்வில் தேர்ச்சி பெற்று ஐ.பி.எஸ் அதிகாரியானார். தொழிலதிபர் குடும்பத்தை சேர்ந்த காம்யா மிஸ்ரா தனது தந்தைக்கு ஒரே மகள். காம்யா மிஸ்ரா ஆரம்பத்தில் ஹிமாச்சல பிரதேசத்தில் பணியமர்த்தப்பட்டு, அதன் பிறகு பீகாருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

அங்கு காம்யா மிஸ்ரா தனது பணியில் சிறப்பாக செயல்பட்டதால் அவரை “பீகார் பெண் சிங்கம்” என்று அழைக்க ஆரம்பித்தனர். முன்னாள் அமைச்சர் முகேஷ் சஹானியின் தந்தை ஜிதன் சகானி கொலை வழக்கை திறம்பட விசாரித்து அனைவரது பாராட்டையும் பெற்றதோடு கிரிமினல்களுக்கு எதிராக எந்த விதபாரபட்சமும் இல்லாமல் நடவடிக்கை எடுத்து அனைவரது பாராட்டையும் பெற்றார். இப்போது தர்பங்கா மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருக்கும் காம்யா மிஸ்ரா திடீரென தனது 28 வயதில் வேலையை ராஜினாமா செய்ய முடிவு செய்து, வேலையை ராஜினாமா செய்வதாக கூறி கடிதமும் கொடுத்துள்ளார்.

ஆனால் காம்யா மிஸ்ரா போன்ற திறமையான காவல் அதிகாரிகளை இழக்க விரும்பாத பீகார் அரசு அவரது கடிதத்தை இன்னும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் அவரிடம் ராஜினாமாவை திரும்ப பெறும்படி கேட்டுக் கொண்டுள்ளது.

ஆனால் காம்யா மிஸ்ரா தனது தந்தைக்கு ஒரே மகளானதால், தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு தனது தந்தையின் தொழிலையும், குடும்பத்தையும் கவனிக்க முடிவு செய்துள்ளார் என தெரிய வருகிறது. காம்யா மிஸ்ராவின் முடிவு அனைத்து காவல் அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காம்யா மிஸ்ரா தனது 12-வது வகுப்பு தேர்வில் 98% மதிப்பெண் பெற்ற நிலையில், டெல்லி பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்த காம்யா மிஸ்ரா அங்கிருந்து கொண்டே தனது யு.பி.எஸ்.சி தேர்வுக்கு தன்னை தயார்படுத்திக் கொண்டார். யு.பி.எஸ்.சி தேர்வில் காம்யா மிஸ்ரா முதல் முயற்சியில் 172-வது இடத்தில் வந்து தேர்ச்சி பெற்றார். காம்யா மிஸ்ராவின் கணவர் அவாதேஷ் சரோஜ் ஒரு ஐ.பி.எஸ். அதிகாரியாவார். இருவரும் 2019-ம் ஆண்டு யு.பி.எஸ்.சி தேர்வில் தேர்ச்சி பெற்றனர். என்பது குறிப்பிடத்தக்கது.