பூர்விகா மொபைல்ஸ் உரிமையாளர் வீட்டில் 2-வது நாளாக தொடரும் வருமான வரி சோதனை..!

பூர்விகா மொபைல்ஸ் உரிமையாளர் யுவராஜ் நடராஜன் வீட்டில் 2-வது நாளாக வருமான வரி சோதனை தொடர்கிறது. சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள பூர்விகா மொபைல் நிறுவன உரிமையாளர் யுவராஜ் நடராஜனின் வீடு மற்றும் அலுவலகம் உட்பட மூன்று இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சோதனையில் 15-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. காலை 7 மணி முதல் சோதனை நடைபெற்று வருகிறது. வரி ஏய்ப்பு தொடர்பான புகாரில் இந்த சோதனை நடைபெற்று வருவதாகக் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மொபைல் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனையில் பூர்விகா நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பூர்விகா நிறுவனத்தின் கடைகள் இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சென்னை கோடம்பாக்கத்தில் பூர்விகா மொபைல்ஸ் உரிமையாளர் யுவராஜ் வீட்டில் 2-வது நாளாக பல்லாவரம், பள்ளிக்கரணை ஆகிய இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

ஸ்டிக்கர் மேல் ஸ்டிக்கர் ஒட்டி ரூ. 500 கோடி முறைகேடு…!

தமிழ்நாடு போக்குவரத்து துறை ரூ 1,200 மதிப்புடைய பிரதிபலிக்கிற ஸ்டிக்கரை, குறிப்பிட்ட 5 நிறுவனங்களிடம் தான் ஒட்ட வேண்டும் என்ற நிபந்தனை விதித்து வண்டிக்கு ரூ.4,200 கட்டாயப்படுத்தி வசூலிக்கப்படுவதாகவும் , ரூ.800 மதிப்புடைய வேககட்டுப்பாட்டு கருவி ரூ. 4,000 மேல் விற்கப்படுகிறது என்றும் மணல் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் யுவராஜ் தெரிவித்துள்ளார்.

மத்திய போக்குவரத்து துறை அங்கீகரித்த 15 நிறுவனங்களிடம் இருந்து ஸ்டிக்கர் பெறாமல், வெறும் 5 நிறுவனங்களிடம் மட்டுமே ஸ்டிக்கர் ஓட்டுவதற்கும் லாரி உரிமையாளர்கள் கட்டாயப்படுத்தபடுவதாகவும் , தங்கள் வாகனத்தில் ஸ்டிக்கர் ஏற்கனவே நல்ல முறையில் இருந்தாலும் அதன் மீது மீண்டும் ஸ்டிக்கர் ஓட்டுவதற்கும் கட்டாயப்படுத்தப்படுவதாகவும் யுவராஜ் வேதனை தெரிவித்துள்ளார். அமைச்சருக்கும், போக்குவரத்து ஆணையருக்கும் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என யுவராஜ் தெரிவித்தார்.