பத்திரிகை சுதந்திரம்தான் உலகப் போர்களை முடிவுக்குக் கொண்டு வந்தது. ஆனால் ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிகை துறை இன்று பல்வேறு தடைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறது. அதன் விளைவு ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிகை துறை தனது சுதந்திரத்துக்காகப் போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
நாடு கடந்த பல ஆண்டுகளாகவே திரும்பும் திசையெல்லாம் லஞ்சம், லாவண்யம் தலைவிரித்து ஆட, நாட்டை ஆண்டோரும், ஆள்வோரும் அப்பாவி மக்களை போதைக்கு அடிமையாகி போலி வாக்குறுதிகளை வாரி இறைத்து ஆட்சி ஆதிக்கத்தை கைப்பற்றி நாட்டை “கார்ப்பரேட் முதலாளிகளுக்கு” விற்று சிறு மற்றும் நடுத்தர குடும்பங்களை பிச்சை எடுக்க வைத்து கொண்டுள்ளார்.
ஆட்சியாளர்களுக்கு துதிபாட பத்திரிகைகளுக்கு அரசியல்வாதிகள் பணத்தை வாரி இறைத்து துதிபாட வைக்கின்றனர். அரசியல்வாதிகளை எதிர்த்து கேள்வி கேட்கும் பத்திரிகைகளை பண பலம், படை பலம், அரசியல் செல்வாக்கு படைத்த அரசியல்வாதிகள் பொதுவெளியில் தங்கள் செல்வாக்கை வளர்த்துக் கொள்ள கடந்த சில ஆண்டுகளாகவே “விபச்சார ஊடகங்கள்” என பேசி ஜனநாயகத்தையே கேவல படுத்திக் கொண்டுள்ளார்.
மேலும் கோடி கோடியாய் கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகள் பொது நிகழ்வுக்கு செல்லும் நிகழ்வுகளை விளம்பர படுத்த நிருபர்களுக்கு 100, 200 பணத்தை கொடுத்து பத்திரிகையில் அவர்களின் செய்திகளை வெளிவர செய்வது வாடிக்கையான விஷயமாகும். இந்நிலையில், “பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்திருந்த சமயம் அவரை வரவேற்பதற்கு பாஜக சார்பாக விதிமுறைகளை மீறி பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்ற செய்தியாளர் ஒருவர் அண்ணாமலையிடம், கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த அண்ணாமலை, காவல்துறையின் அனுமதியுடன்தான் பேனர் வைக்கப்பட்டதாகவும், விதியை மீறி பேனர் வைத்ததற்கான ஆதாரம் உள்ளதா? என்று செய்தியாளரிடம் கேட்டார். இதற்கு அந்த செய்தியாளர், தன்னிடம் உள்ள ஆதாரம் குறித்து விளக்க ஆரம்பித்த போது, அவரை பேச விடாமல் தடுத்த அண்ணாமலை, உங்களுக்கு “200 ரூபாய் நிச்சயம்” என்று பேசினார்.
இதற்கு அங்கிருந்த மற்ற செய்தியாளர்கள் கண்டித்த போது, சரி 500 ரூபாய் வாங்கிக்கொள்ளுங்கள் அல்லது 1000 ரூபாய் வாங்கிக்கொள்ளுங்கள் என்று அண்ணாமலை பேசியது ஜனநாயகத்தை இழிவுபடுத்தும் செயலாகும். நாங்கள் கடந்து பாதைகள் அண்ணாமலைக்கு நினைவு படுத்துகிறோம்.
கி.மு.500 முதல் கி.பி.200 முடிய உள்ள காலத்தில் பல்வேறு புலவர்கள், பல்வேறு இடங்களில் அமர்ந்து பாடிய ஏராளமான பாடல்களில் அக்காலத்து அரசர்கள் புலவர்களின் துணையோடு செயல்பட்டனர். புலவர்கள் பாடல்கள் ஓலைச் சுவடிகளில் இருந்து அழிந்துபோக, எஞ்சியவற்றைத் தொகுத்தது எட்டுத்தொகையும், பத்துப்பாட்டுமாகும். இக்காலப்பகுதியில் படைக்கப்பட்ட இலக்கண நூல்களுள் தொல்காப்பியம் மட்டுமே கிடைத்தது உலகறிந்தது.
சங்க இலக்கியங்களில் உலகிற்கே முன்னுதாரமாக நம்மை ஆண்டோர் பண்பாடு, கலாச்சார, நாகரிக வளர்ச்சி, நீதி வழுவாமை என எத்தனையோ நாற்பண்புகளில் சிறந்து விளங்கினர். அதனால் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை அவர்கள் “தமிழனென்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா” என பாடி நம் நாடி நரம்பு முறுக்கேற செய்தார்.
நக்கீரனார், அகத்தியம், அரிசில் கிழார், தொண்டைமான், இளந்திரையன், ஓடைகிழார் நாஞ்சில் வள்ளுவன், காரி, நெட்டிமையார், பரணர், பிசிராந்தையார், பொய்கையார், மாங்குடி கிழார், மாசாத்தனார், மோசி கீரனார், வெண்ணிக் குயத்தியார், ஔவையார் போன்ற புலவர்கள் மன்னர்களின் வீரம், கொடை, புகழ் போன்றவற்றை பாடினார். மேலும் மன்னர்கள் அறநெறியில் தவறும்போது இடித்துரைத்து நல்வழி படுத்தினர்.
அதாவது உறையூரைத் தலைநகராகக் கொண்டு, சிறந்த தமிழ்ப்புலவன்; நற்குணங்கட்கு இருப்பிடமானவன்; அறத்தின் நுட்பங்களை உணர்ந்து அறவழி ஒழுகிய சோழ மன்னன் கோப்பெருஞ்சோழன் ஆட்சி காலத்தில் புல்லாற்றூர் எயிற்றியனார் அரசருக்கு நீதி உரைத்ததை அமைச்சராகிய நீர் அறியாரோ இதோ அதை உமக்கு உரைக்கின்றேன். கோப்பெருஞ் சோழன் நல்லியல்புகட்கு மாறாக அவன் மக்களான இளங்கோச் சோழன் மற்றும் செங்கோச் சோழனும் தீய இயல்புகளைப் பெற்றிருந்தனர். தந்தையாண்ட பேரரசின் சில பகுதிகளை ஆண்டு வந்த இளங்கோச் சோழன் மற்றும் செங்கோச் சோழனும் பதவி ஆசையில் நாட்டை முழுவதும் ஆட்சி செய்ய விருப்பினர்.
மேலும் இளங்கோச் சோழன் சோழநாட்டுப் படைத்தலைவர் பரூஉத் தலையாரின் மகள் மணியிடையை விரும்பினான். அவளைத் திருமணம் செய்ய விரும்புவதாகப் படைத்தலைவரிடம் கூறி திருமணத்திற்கு முன்பு, தான் மன்னன் ஆவதற்கு உதவுமாறு பரூஉத் தலையாரிடம் வேண்டினான். இதுமட்டுமின்றி தம்பி செங்கோச் சோழனின் படையுடன் தந்தை கோப்பெருஞ் சோழனை எதிர்த்து வந்தனர். படை வருவதை அறிந்த கோப்பெருஞ் சோழன் பெரும் படையுடன் தன் மக்கள் மீது போர் புரியச் சென்றான்.
அந்நிகழ்ச்சியைக் கண்ட அவைப் புலவராகிய புல்லாற்றுார் எயிற்றியனார் கோப்பெருஞ் சோழனை நல்வழிப்படுத்த கோப்பெருஞ்சோழனை நோக்கி, “பகைவரை வெல்ல வல்ல வேந்தே, பேரரசனாகிய கிள்ளியே, நின்னுடன் போர் செய்ய வந்தவர் நின்பகைவர் அல்லர், நீ உலகை வெறுத்துத் தேவர் உலகம் எய்த பின்னர் இவ்வரசாட்சிக்கு உரியவர் அவரே யாவர். இதனை நீ வென்ற பின்னர் இந்நாட்டை யாருக்கு அளிப்பை? நீ போரில் தோற்ற பின், நின் பகைவர் இழக்கத்தக்க பழியை உலகில் நிறுத்தியவன் ஆவாய்! ஆதலின், நினது மறன் ஒழிவதாக விண்ணோர் விருப்புடன் நின்னை விருந்தாக எதிர்கொள்ள நல்வினை செய்தல் நல்லது அதற்கு விரைந்து எழுக நின் உள்ளம் வாழ்வதாக”என்று உருக்கமாக உரைத்து தடுத்து நிறுத்தினார் என்பது சரித்திரம்.
அதன்வரிசையில், கடையேழு வள்ளல்களில் ஒருவனாகத் திகழ்ந்த பாரி பறம்பு மலையின் மன்னன் மனித உயிர்களுக்கு மட்டுமன்றி முல்லைக் கொடியின் கொழு கொம்பாகத் தன் தேரையே நிறுத்தி வள்ளல். கபிலர் என்னும் செந்நாப் புலவரின் உற்ற நண்பன். மூவேந்தரான சேர சோழ பாண்டிய மன்னர்களும் பாரியின் புகழைக் குறித்துப் பொறாமை கொண்டனர். அவன் நாட்டைக் கைப்பற்ற எண்ணம் கொண்டனர்.
சிற்றரசனான பாரியின் மேல் அவர்களுக்கு இருந்த பொறாமையில் மூவேந்தரும் சேர்ந்து பறம்பு மலையை முற்றுகை இட்டனர். பல மாதங்களாகியும் பறம்பு மலையைக் கைப்பற்ற இயலவில்லை. மூவேந்தர் பறம்பு மலைக்குக் கீழே சுற்றிவளைத்துக்கொண்டு முற்றுகையிட்டிருந்த அவர்கள் எப்படியும் என்றைக்காவது ஒருநாள் பாரி கீழே இறங்கி வந்து தங்களுக்குப் பணிந்துதான் ஆகவேண்டும் என்று கனவு கண்டு கொண்டிருந்தனர்.
ஆனால் பாரி வள்ளலோ, மூவேந்தர் முற்றுகையினாலோ, பயமுறுத் தலினாலோ சிறிதும் அச்சமுறவுமில்லை; அயரவுமில்லை. எப்போதும் போல அவனும் அவனுடைய குடிமக்களும் வளமான நிலையில் மகிழ்ச்சி குன்றாமலே வாழ்ந்து வந்தார்கள். பாரி வள்ளலின் உயிர் நண்பர் புலவர் கபிலர் பறம்பு மலையில் பாரி வள்ளலுடன் கூடவே இருந்தார். ஒரு நாள் பாரி வள்ளலின் சார்பாகக் கீழே முற்றுகையிட்டிருக்கும் மூவேந்தர்களைச் சந்தித்துச் செல்வதற்காகக் கபிலர் மலைமேலிருந்து கீழே வந்தார்.
மூவேந்தர்கள் கபிலரை தமிழ்ப் புலவர் என்ற முறைக்கு மரியாதை கொடுத்து வரவேற்று விருந்தினராக அவர்களோடு தங்கவைத்தனர். சிலநாட்கள் கழிந்தபின், ஒருநாள் கபிலரோடு பேசிக் கொண்டிருக்கும்போதே கபிலர் வாயிலிருந்து பறம்பு மலை அரண்களைப் பற்றிய இரகசியமான விவரங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ள முயன்றனர். மூவேந்தர் “நாங்கள் இவ்வளவு நாட்களாக இங்கே முற்றுகை இட்டிருந்தும் உங்கள் பாரி சிறிதும் கவலையே இல்லாமல் மலைமேல் சுகமாக இருக்கிறானே? எங்கள் முற்றுகை அவனை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லையோ?”
அதற்கு கபிலர், பதில் ஏதும் கூறாமல் மூவேந்தர்களையும் பார்த்து மெல்ல சிரித்தார். மேலும் “பாரியைப் பற்றியா கேட்கிறீர்கள்? மிகவும் நல்ல கேள்விதான்! நீங்கள் இத்தனை பலமாகவும் பயங்கரமாகவும் முற்றுகையிட்டிருந்தும்கூடப் பாரி இன்னும் மலைமேல் குறைவின்றி எப்படி வாழ்கிறான்? என்ற விவரம் உங்களுக்கும் தெரிய வேண்டியதுதான். ஆனால்…”
நீங்கள் மூன்று பேரரசர். பெரும்படைகளோடு வந்திருக்கின்றீர். ஆனால், பாரி ஒரு தனிநபர் வெறுங் குறுநில மன்னன். பாரியின் படைகளின் தொகை, உங்கள் படைகளில் நூற்றில் ஒரு பங்கு. இந்தப் படைகள் மட்டுமின்றி இன்னும் ஆயிரம் மடங்கு பெரும்படைகளை வேண்டுமானாலும் நீங்கள் கொண்டு வரலாம். பாரியை மாத்திரம் படை பலத்தால் அசைக்கக்கூட முடியாது உங்களால் என்பதை மறந்து விடாதீர்கள்.”
மூவருடைய முற்றுகை யினாலும் பறம்புமலை சிறிதும் பாதிக்கப்படாது. உழவர் உழாமலே இயற்கையிலேயே நான்கு உணவுப் பொருள்கள் மலைமேல் விளைகின்றன. மூங்கிலரிசி ஒன்று; பலாப்பழம் இரண்டு வள்ளிக்கிழங்கு மூன்று கொம்புத்தேன் நான்கு இந்த நான்கு குறையாத உணவுப் பொருள்களோடு பளிங்கு போலத் தெளிந்த இனிய நீர்ச்சுனைகளுக்கும் பறம்பு மலையில் பஞ்சமே இல்லை. இதனால் மலைமேல் உணவுப் பஞ்சமோ, தண்ணீர்ப் பஞ்சமோ ஏற்பட்டுப் பாரி அவற்றைத் தாங்க இயலாமல் வருந்தி நடுங்கிக் கீழே ஒடி வந்து உங்கள் முற்றுகைக்கு அடிபணிவான் என்று கனவிலும் நினையாதீர்கள்.
யானைப் படைகளையும் தேர்ப்படைகளையும் மலைமலையாகக் குவித்தாலும் போர் முயற்சி பயன் தராது. நீங்கள் மூவர் மட்டும் மலைமேல் ஏறி அவனோடு வாட் போர் செய்யலாமென்றலோ வாட் போரில் பாரி உங்களை இலேசில் விடமாட்டான். பாரியின் பறம்பு மலையில் முந்நூறு சிற்றுார்கள் உள்ளன, இந்த முந்நூறு ஊர்களையும் தன்னை நாடிவந்த பரிசிலர்களுக்கு ஒவ்வொன்றாகக் கொடுத்துத் தீர்த்துவிட்டான் பாரி. இப்போது அவனிடம் எஞ்சியிருக்கும் பொருள்கள் மூன்றே மூன்றுதாம். நானும் அவனும் பறம்பு மலையுமே. நீங்கள் என்னையும் பாரியையும் பறம்பு மலையையும் வெல்ல வேண்டுமானால் அதற்கு இம்மாதிரி ஆயுதங்கள் தாங்கிய போர்க்கோலமோ, படைகளோ தேவையில்லை!”
“மூவேந்தர்களே! நீங்கள் பாட்டுப்பாடும் பாணர்களாகவும் கூத்தாடும் விறலியர்களாகவும் வேடமிட்டுக்கொண்டு பாரிக்கு முன்னால் சென்று ஆடி பாட வேண்டும். ஆடி பாடி முடிந்ததும் ‘உங்களுக்கு என்ன பரிசில்வேண்டும்’ என்று கேட்பான் பாரி. ‘உன் உயிரும் பறம்பு மலையும் எங்களுக்கு வேண்டும்’ என்று நீங்கள் மூவரும் தலைவணங்கிக் குழைவான குரலில் கேளுங்கள். தயங்காமல் இரண்டையும் உடனே உங்களுக்குக் கொடுத்து விடுவான் அவன். நீங்கள் பாரியை வெல்ல இந்த ஒரே ஒருவழிதான் உண்டு. வாளோலோ, போராலோ, முற்றுகை யாலோ நீங்கள் நிச்சயமாக அவனை வெல்ல முடியாது” கபிலர் கூற மூவேந்தர் நெஞ்சத்தை அணுஅனுவாகச் சித்திரவதை செய்யும் விஷமத்தனம் நிறைந்த புன்னகை ஒன்று கபிலர் இதழ்களில் நெளிந்தது.
மூவேந்தர்கள் முகத்தில் ஈயாடவில்லை, கபிலர் பேசிய வார்த்தைகள் மூவேந்தர்களை வெட்கித் தலைகுனியும் படியாக வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல ஏற்ற மூவேந்தர்களைக் கூனிக் குறுகி சிலைகள் வீற்றிருக்கும்படி செய்தார். மேலும் “பாரி, வாளுக்குமுன் பணியமாட்டான். கலைக்குமுன் பணிவான்.போரில் பகைவர்களுக்குத் தோற்காததன் நாட்டையும் உயிரையும் அரண்மனையில் தனக்குமுன் ஆடிப்பாடும் கலைஞர் களுக்குத் தோற்கத் தயாராயிருப்பான்.
கலைக்கும் கவிதைக்கும் தலை வணங்கி யாவற்றையும் அளிக்கத் தயாராயிருப்பான். ஆனால் போரால் அவனை அசைக்க முடியாது” முன்னிலும் பலமாக வாய்விட்டுச் சிரித்தார் கபிலர். சிரித்துக்கொண்டே மூவேந்தர்களையும் நோக்கி, “வருகிறேன் மன்னர்களே! நான் மலைமேல் போக வேண்டும்” என்று கூறிவிட்டு, தைரியமாகக் கைவீசிச் சிரித்துக்கொண்டே நடந்து செல்லும் அந்தப் புலவரை இமைக்காமல் பார்த்துக் கொண்டே திக்பிரமை பிடித்துப்போய் வீற்றிருந்தனர் மூவேந்தர்!
இதனால் தான் அன்று நாடும் நகரமும் செழிப்பாக இருந்தது. புலவர்கள் மட்டுமல்லாமல் மன்னர்களும் புலவர்களாக இருந்து மட்டுமன்றி அவர்தம் மக்களும் பாடல் பாடும் அளவிற்குச் சிறந்த தமிழறிவு பெற்றிருந்தனர்.
“மன்னன் எவ்வழி :
மக்கள் அவ்வழி “- என்ற பழமொழிகேற்ப களவு, கொலை , கொள்ளை போன்ற எந்தவிதமான தீய செயல்களும் நடைபெறாமல் மன்னன் செங்கோல் தவறாது ஆட்சி புரிந்தால் நாட்டு மக்களும் மகிழ்ச்சியாக இருப்பர்.
காலக்கொடுமை உலகெங்கும் நடைபெற்ற “தொழில் புரட்சியின்” விளைவாக ஏற்பட்ட காலனி ஆதிக்கத்தால் மெல்ல மெல்ல மன்னராட்சி முடிவுக்கு வந்து பின்னர் படிப்படியாக மக்களாட்சி வந்ததோ! அன்றிலிருந்து ஆட்சி அதிகாரங்களில் ஊரெங்குமுள்ள மொள்ளமாரிகள் மற்றும் முடிச்சவிக்கிகள் கைகளில் செல்ல களவு, கொலை, கொள்ளை போன்ற தீய செயல்கள் அரங்கேற கிடைத்தவன் கிடைத்ததை வாரி சுருட்டிக்கொள்ள ஆரம்பித்தான்.
புலவர்கள் இடத்தில் இருக்கும் பத்திரிகை துறைகள் ஜனத்தின் நான்காவது தூணாக இருந்தது. விடுதலை போராட வீரரும், பெண்கள் விடுதலை, ஜாதி பாகுபாடுகளுக்கு எதிராக குரல் கொடுத்தவருமான பாரதியார் முதலில் ஜி.சுப்பிரமணிய ஐயர் நடத்திய ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையில் பணி அமர்ந்தார். இரண்டரை ஆண்டுகள் பணியாற்றிய பாரதியார் காரணம் எதுவும் தெரியாமல் நீக்கப்பட்டார்.
இதற்கிடையே பி.வைத்தியநாதய்யர் என்பவர் நடத்தி வந்த “சக்கரவர்த்தினி” பாரதியார் 1906-ல் ஆகஸ்ட் மாதம் ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இந்த பத்திரிகையில் பாரதியார் குழந்தைத் திருமணம், சதி என்னும் உடன்கட்டை ஏறும் வழக்கம், வரதட்சணை, கைம்பெண் கொடுமை ஆகிய நடைமுறைகளை கடுமையாக எதிர்த்துக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். 1906-ல் பாரதியார் “சக்கரவர்த்தினி” பத்திரிகையிலிருந்தும் வெளியேறினார். அதன்பின்னர் பாரதியார் தனியாக பத்திரிகை தொடங்கி நடத்த ஆசைப்பட்டார். ஆனால் அந்த அளவுக்கு பாரதியாரிடம் நிதிவசதி இல்லை அதனால் பல நண்பர்களின் உதவியை நாடினர் ஆனாலும் பயனில்லை.
அதன்பின்னர் நாட்டின்மீது கொண்டிருந்த பற்றின் காரணமாக மண்டையம் திருமலாச்சாரியார் தொடங்கி “இந்தியா” இந்த பத்திரிகையில் ஆசிரியர் என்று மண்டையம் திருமலாச்சாரியாரின் உறவினர் சீனிவாசன் என்பவர் பெயர் இருந்தும் பாரதியார் ஆசிரியர் பொறுப்பை ஏற்றார். அதுவும் நீண்ட நாட்கள் தொடரவில்லை. அதாவது பத்திரிகை துறையானது முழுக்கமுழுக்க அரசியல்வாதிகளின் கட்டுப்பாட்டிற்கு மெல்ல மெல்ல நகர தொடங்கியது. உண்மை, நேர்மை, நாட்டு பற்று என சமூக சிந்தனையில் இருந்த பாரதியராலேயே நாடு சுதந்திரம் அடையும் முன்பே பத்திரிகை துறையில் தொடர முடியவில்லை என்பதே ‘நிதர்சனமான உண்மை’.
நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தங்களின் கொள்கைகளை வெளியுலகிற்கு உணர்த்த அவர்களே பத்திரிகைகள் ஆரம்பிக்க தொடங்கினர். அதுமட்டுமின்றி அரசியல் கட்சிகளுக்கு துதிபாடும் பத்திரிகைகளும் மெல்லமெல்ல வளர நாடு, நாட்டுப்பற்று, நாட்டு மக்கள் என தொடங்கிய பத்திரிகைகள் வந்த இடம் தெரியாமல் பறந்துபோக ஆசிரியர்களும் மகாகவி பாரதியைப் போல மறைந்துகொண்டே இருக்கின்றனர்.
நாட்டை ஆள்பவர்களும், அதிகாரங்களில் இருப்பவர்களும் பத்திரிகை துறையை நாள், வாரம், மாதம் என பிரித்து தரம் பார்த்து செய்திகள் கொடுக்க நாளடைவில் பத்திரிகை துறையானது அரசியல்வாதிகளின் செய்திகள் மற்றும் அதிகாரிகள் கொடுக்கும் செய்திகளை உண்மை தன்மை அறியாமல் எங்களின் TRP -காக அவசர அவசரமாக வெளியிடுகின்றோம். அவர்கள் கொடுக்கும் செய்திகள் அடுத்த நாளோ அல்லது ஒரு சில ஆண்டுகள் கழித்தோ உண்மை இல்லை என்று உணர்ந்தால் நாங்களும் முட்டாளாகி நாட்டு மக்களையும் முட்டாளாக்குவது மட்டுமின்றி அந்த செய்தியையும் வெளியிடுகின்றோம்.
பண்டைய காலம் தொட்டே உண்மைகளை வெளியுலகிற்கு கொண்டு வருவோர் கையேந்திக் கொண்டு உள்ளோம் என்பது வரலாற்று பக்கங்களை திருப்பி பாருங்கள் அப்போது தான் உங்கள் ஆணவப் பேச்சுக்கு விடை தெரியும். கோடி கோடியாய் கொள்ளை அடிக்கும் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் மக்களுக்கு நல்லது செய்வதை போல நிருபர்களுக்கு 100, 200 கொடுத்து அவர்கள் விளம்பர படுத்தி கொள்ளும் நயவஞ்சக அரசியல்வாதிகளின் செயல் எப்போது ஒவ்வொரு நிருபரும் உணர்கின்றானோ அப்போது அரசியல்வாதியின் முகத்திரை கிழிவது சத்தியம்!