நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகி சிவராமன் மீது ரூ.36 லட்சம் மோசடி புகார்..!

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே கந்திகுப்பம் கிராமத்தில் இயங்கிவரும் தனியார் பள்ளியில் போலியாக NCC முகாம் நடத்தி 13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். 13 மாணவிகள் பாலியல் ரீதியாக தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்டனர். இது குறித்து போலி NCC முகாம் நடத்தி சிறுமியை பலாத்காரம் செய்த காவேரிப்பட்டணம் காந்தி நகர் காலனியை சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி சிவராமன், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

வழக்கு பதிவானதும் அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். மாணவி பலாத்கார சம்பவத்தை மறைக்க முயற்சி செய்த பள்ளி முதல்வர், தாளாளர், ஆசிரியைகள், பயிற்சியாளர்கள் உள்பட மேலும் 10 பேர் கைது செய்யப்பட்டனர். இதனிடையே சிவராமன் தன்னை வக்கீல் என கூறி ரூ.36 லட்சம் மோசடி செய்ததாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு அளித்தனர். இந்த புகாரின் பேரில் சிவராமன் மீது ஏமாற்றுதல், நீதிமன்றம் மற்றும் பத்திரப்பதிவு ஆவணங்களை போலியாக தயாரித்தல், பொய்யாக ஆவணத்தை தயாரித்து ஏமாற்றுவது உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது.