ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி 1,008 பால்குட ஊர்வலம்

ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் அம்மன் கோவில்களில் ஆடித்திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. ஆடி மாத கடைசி  நேற்று வெள்ளியையொட்டி தமிழகமெங்கும் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தாிசனம் செய்தனர்.

நாமக்கல் மாவட்டம், மோகனூர் அடுத்த ஒருவந்தூரில் பிரசித்தி பெற்ற பிடாரி செல்லாண்டியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி காவிரி ஆற்றில் புனித நீராடிய பக்தர்கள், விநாயகர் வழிபாடு செய்தனர். தொடர்ந்து 1,008 பால்குடங்களை எடுத்துக் கொண்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்தனர்.

இதையடுத்து மூலவர் செல்லாண்டியம்மனுக்கு 1,008 பால்குடம் அபிஷேகம் நடைபெற்றது. அதையடுத்து அம்மனுக்கு பூஜைகள் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். அதன்பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

நாமக்கல் உதவி ஆய்வாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!

நாமக்கல் மோகனூர் சாலையில் இருக்கும் திருநகரில் வசித்து வரும் பூபதி நாமக்கல் நகர காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். பூபதி, ராசிபுரம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த போது, நிலப் பிரச்னை தொடர்பாக பணம் பெற்றிருக்கிறார் என்று இவர்மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது.

அதேபோல், கடந்த 2020 – ம் ஆண்டு நாமக்கல் காவல் நிலையத்தில் பணிபுரிந்த போது, கஞ்சா வியாபாரிகளிடம் ரூ.40 லட்சம் வரை லஞ்சம் வாங்கியதாகவும் கூறப்பட்டது. பூபதி இப்படி சம்பாதித்த பணத்தில், சொகுசு கார் மற்றும் சொத்துக்கள் வாங்கி குவித்திருப்பதாக தெரிய வந்திருக்கிறது.

அதன் அடிப்படையில்தான் இன்று காலை முதல் நாமக்கல் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி சுபாஷினி தலைமையில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். அதேபோல, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, மல்லசமுத்திரத்தில் இருக்கும் இவரது தந்தை மற்றும் மாமனார் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.