தேனி மாவட்டத்தில் திருமணத்துக்கு வந்த மொய் பணம் அனைத்தையும், மணமக்கள் மதுரை ஐஸ்வர்யம் அறக்கட்டளை தன்னார்வ நிறுவனம், புதிதாக ஆரம்பிக்க இருக்கும் புற்றுநோய் பிரிவு கட்டிடம் கட்டுவதற்கு நிதியாக வழங்கிய நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
கல்யாணம், காது குத்து போன்ற சுப நிகழ்ச்சியின் போது மொய் செய்யும் பழக்கம் காலம் காலமாக வழக்கத்தில் உள்ளது. மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை போன்ற தென் மாவட்டங்களில் சுப நிகழ்ச்சிகள் வைத்து, மொய் பணத்தை சேகரித்து தங்கள் வீட்டுக்கடன், குடும்பக் கடன் போன்றவற்றை அடைப்பார்கள். மொய் செய்யும் போது 100, 500, ஆயிரம் என்று பணம் மட்டுமில்லாது தங்கம், பாத்திரங்கள், அலங்காரப் பொருட்கள் போன்ற பல்வேறு பரிசுப் பொருட்களையும் அன்பளிப்பாக தருவார்கள்.
இந்நிலையில், தேனி மாவட்டத்தில் திருமணத்துக்கு வந்த மொய் பணம் அனைத்தையும், மணமக்கள் மதுரை ஐஸ்வர்யம் அறக்கட்டளை தன்னார்வ நிறுவனம், புதிதாக ஆரம்பிக்க இருக்கும் புற்றுநோய் பிரிவு கட்டிடம் கட்டுவதற்கு நிதியாக வழங்கிய நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது. தேனி மாவட்டம் சொக்கம்பட்டி வேல்மணி கல்யாண மண்டபத்தில் ஹரிகரன் – தேன்மொழிக்கு திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் மணமக்களின் உறவினர்கள், நண்பர்கள் விருந்துண்டு மொய் செய்தனர்.
ஹரிகரனும் தேன்மொழியும் தங்கள் திருமணத்திற்காக இரு வீட்டு உறவினர்கள், நண்பர்கள் செய்த மொத்த மொய்ப் பணம் ரூ.1,91,698-ஐ மனமுவந்து சந்தோஷத்துடன் மதுரை ஐஸ்வர்யம் அறக்கட்டளை தன்னார்வ நிறுவனம், புதிதாக ஆரம்பிக்க இருக்கும் புற்றுநோய் பிரிவு கட்டிடம் கட்டுவதற்கு நிதியாக வழங்கி நெகிழ வைத்துள்ளனர்.