தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா உட்பட பல்வேறு மாநிலங்களில் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ள கோயம்புத்தூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் மைவி 3 ஆட்ஸ் என்ற எம்எல்எம் ஆன்லைன் நிறுவனம் செயல்படு வருகிறது. இந்த நிறுவனத்தில் .ஆன்லைன் மூலம் விளம்பரங்கள் பார்ப்பது, பொருட்களை வாங்குவது, ரேட்டிங் தருவது உள்ளிட்ட பணிகளை செய்வதன் மூலம் வீட்டில் இருந்தபடியே சுலபமாக சம்பாதிக்கலாம் என யூ டியூப் சேனல்களிலும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் இந்த நிறுவனத்திற்கு ஏராளமானோர் விளம்பரம் செய்து வருகின்றனர்.
உறுப்பினர்களுக்கு தினமும், 100 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை அவர்களின் விளம்பரம் தேடல், ரேட்டிங்கிற்கு ஏற்ப பணம் வழங்கப்பட்டு வருவதாக தெரிகிறது. மேலும் உறுப்பினர்களாக சேருபவர்களுக்கு உரிய அனுமதியின்றி ஆயுர்வேத மாத்திரைகளை விற்பனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த நிறுவனம் மோசடியான முறையில் பொதுமக்களிடம் இருந்து பணத்தை வசூலித்து வருவதாக கோயம்புத்தூர் மாநகர குற்றப்பிரிவு காவல்துறையில் அளிக்கப்பட்ட புகாரில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான பீளமேடு பகுதியை சேர்ந்த சத்தி ஆனந்தன் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த நிறுவனத்துக்கு எதிராக பலர் புகார் கொடுத்த வண்ணம் உள்ளனர். இதேபோல், நேற்று சிலர் கோயம்புத்தூர் மாநகர குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தனர். அப்போது பாமக நிர்வாகி அசோக் ஸ்ரீநிதி செய்தியாளர்களிடம் கூறுகையில், மை வி3 நிறுவனத்துக்கு எதிராக கடந்த சில நாட்களுக்கு முன்பு 10 பேர் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். தற்போது மேலும் 10 பேர் கொடுத்த புகாரை அளித்துள்ளோம். மை வி3 உரிமையாளர் விஜயராகவன் யுனிசெப் அமைப்பை உருவாக்கி அதன் தேசிய இயக்குனராக இருந்துள்ளார். அதன் மூலம் தனக்கு தானே போலியான டாக்டர் பட்டம் கொடுத்துள்ளார். மேலும் தனது நிறுவனத்தில் உள்ளவர்கள் 200 பேருக்கு போலி டாக்டர் பட்டம் கொடுத்துள்ளார்.
அதனை வீடியோ ஆதாரத்துடன் புகாரில் கொடுத்துள்ளோம். இந்த நிறுவனத்தில் உள்ள இக்னிசியஸ் பிரபு என்பவர் மதுரையை சேர்ந்த ஒருவரிடம் கவர்னரிடம் விருது வாங்கி தருவதாக ரூ.15 லட்சம் மோசடி செய்துள்ளார். இந்த நிறுவனத்தில் ரூ.190 மதிப்பிலான ஹெர்பல் தயாரிப்புகளை ரூ. 3900 க்கு விற்பனை செய்துள்ளனர். இந்த மருந்துகளை தயாரிப்பவர் 10-வது பெயிலானவர். இவர் மத்திய அரசின் பாரத் சேவக் சமாஜ் அமைப்பில் உள்ளார். இவருக்கும் டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளாக கூட்டு சேர்ந்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என பாமக நிர்வாகி அசோக் ஸ்ரீநிதி தெரித்தார்.