ராகுல் காந்தி: ‘மேட்ச் பிக்ஸிங்’கில் பிரதமர் மோடி தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்…!

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவால் கடந்த 21-ம்தேதி கைது செய்யப்பட்டார். இதைகண்டித்து எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணி சார்பில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் இண்டியா கூட்டணியை சேர்ந்த 28 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்ற பொதுக்கூட்டம் நடைபெற்றது.

பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், கேஜ்ரிவாலும், ஹேமந்த் சோரனும் சிறையில் இருந்தாலும் மனதளவில் நம்மோடுதான் உள்ளனர். ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டியின்போது பணம் கொடுத்து வீரர்களை வாங்கியோ, நடுவர்களுக்கு அழுத்தம் தந்தோ, அணியின் கேப்டன்களை மிரட்டியோ வெற்றிபெற்றால் அதை ‘மேட்ச் பிக்ஸிங்’என்கின்றனர்.

இப்போது மக்களவை தேர்தல் என்ற போட்டி தொடங்கி உள்ளது. இதில் ‘மேட்ச் பிக்ஸிங்’கில் பிரதமர் மோடி தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். தேர்தல் தொடங்குவதற்கு முன்பே இண்டியா கூட்டணியை சேர்ந்த 2 தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

அமலாக்கத் துறை, சிபிஐ, வருமான வரித் துறை உள்ளிட்டவை எதிர்க்கட்சித் தலைவர்களை மட்டும் குறிவைக்கின்றன. இவை அனைத்துமே ‘மேட்ச் பிக்ஸிங்’தான். இந்திய அரசமைப்பு சாசனத்தை அழிக்கவும் மக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கவும் பாஜக தொடர்ந்து முயற்சி செய்கிறது.

“தேர்தல் களத்தில் பிரதமர் மோடி மேட்ச் பிக்சிங் மூலம் வெற்றிபெற நினைக்கிறார். மேட்ச் பிக்சிங் மூலம் பாஜக வெற்றி பெறும்போது நமது அரசியலமைப்பு முடிவுக்கு வந்துவிடும். எங்களுடைய வங்கி கணக்குகள் முடக்கப்பட்டிருக்கின்றன. 6 ஆண்டுகளுக்கு முந்தைய விவகாரத்தில் அபராதம் விதிக்கப்படுகிறது. அதை அப்போதே செய்திருக்க வேண்டியதுதானே. தேர்தலுக்கு முன்பாவது செய்திருக்கலாமே.. இரண்டு முதலமைச்சர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். பாஜக ஒருவேளை வெற்றி பெற்று அரசியலமைப்பு சட்டத்தை மாற்றினால், நாடு முழுவதும் தீ பற்றி எரியும்.

இந்த தேர்தல் வாக்குகளுக்கானது அல்ல. இது அரசியலமைப்பை காப்பாற்றுவதற்கான தேர்தல். இந்த தேர்தலை பாஜக நியாயமாக சந்தித்தால் 180 இடங்களில் மட்டும்தான் வெற்றி பெறும். தேர்தலில் எதிர்க்கட்சியினரை போட்டியிடாமல் இருக்க வைப்பதே பாஜகவின் திட்டம்” என ராகுல் காந்தி பேசினார். என ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.