போதை ஏறிப்போச்சு புத்தி மாறி போச்சு..! காலி செய்து விடுவேன்…!

சென்னை மெரினா கடற்கரை லூப் சாலையில் மயிலாப்பூர் காவல்துறை நேற்றிரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சாலையில் காரை நிறுத்திவிட்டு, உள்ளே ஒரு ஆணும் பெண்ணும் தனிமையில் இருந்துள்ளனர். இதைப்பார்த்த காவல்துறை, காரை எடுக்கும்படி காருக்குள் இருந்த இருவரிடமும் சொன்னதாகக் கூறப்படுகிறது.

அப்போது, அதில், ‘நீங்கள் யார்?’ என்று அந்த ஆண் – பெண்ணிடம் காவல்துறை கேட்டதும், ஒரு பொம்பள இன்ஸ்பெக்டர் எப்படி வணக்கம் போடுவா தெரியுமா..? மூஞ்ச பாரு வையாபுரி மூஞ்சி என இருவரும் போஸ் கொடுத்து கிண்டல் செய்தனர். மேலும் அந்த ஆண், “நான் உதயநிதி ஸ்டாலினை இங்கேயே கூப்பிடுவேன் பார்க்கிறாயா?” என காவல்துறையினரை மிரட்டும் தொணியில் பேசி கேலியும் கிண்டலும் செய்துள்ளார். தொடர்ந்து “உன்னால் முடிந்ததை பாரு” என மிரட்டல் விடுத்த அந்த நபர், “நான் குடித்துதான் இருக்கிறேன்.

என்னால் வண்டியை எடுக்க முடியாது. நாளைக்கு காலையில டிபன் சாப்பிட மாட்ட, நாளை காலை உங்க முகவரி எல்லாத்தையும் எடுத்து உங்களை காலி செய்து விடுவேன்” எனக்கூறியதோடு காரை வட்டமிட்டபடி எடுத்துச் சென்றார். இந்த ரோந்து காவல்துறையினரை மிக இழிவாக பேசிய அந்த இருவரும், அநாகரீகமாக நடந்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை காவல்துறையினர் வீடியோ பதிவு செய்த நிலையில், அந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், காவல்துறை விசாரணை மேற்கொண்டனர். காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், காரில் இருந்த இருவரும் கணவன் மனைவி இல்லை என்பது தெரியவந்துள்ளது.

தர்ப்பணம் கொடுத்த உளவுத்துறை துணை கமிஷனரிடம் திருடர்கள் கைவரிசை…!

ஆடி அமாவாசையை முன்னிட்டு, நேற்று முன்தினம் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மெரினா கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். அதன்படி, சென்னை அடையாறு இந்திரா நகரில் அரசு ஊழியர்கள் குடியிருப்பில் வசித்து வரும் ஒன்றிய உளவுத்துறை துணை கமிஷனர் ராஜீவ் நாயர், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க மெரினா கடற்கரைக்கு வந்தார்.

பிறகு விவேகானந்தர் இல்லம் எதிரே உள்ள கடற்கரையில், கையில் கொண்டு வந்த தனது செல்போன், ஏடிஎம் கார்டு, ஓட்டுநர் உரிமம் அட்டை, பான் கார்டு, ரூ.1500 அடங்கிய பையை வைத்துவிட்டு, கடலில் இறங்கி துணை கமிஷனர் ராஜீவ் நாயர் தர்ப்பணம் கொடுத்தார். கரைக்கு வந்து பார்த்த போது, அவர் வைத்துவிட்டு சென்ற பை மாயமாகி இருந்தது தெரியவர துணை கமிஷனர் ராஜீவ் நாயர் புகாரின் பேரில் மெரினா காவல்துறை விசாரித்து வருகின்றனர்.