திருத்துறைப்பூண்டி தலைக்காடு ஸ்ரீபழனி ஆண்டவர் திருக்கோயில் தைப்பூச விழா கொண்டாட்டம்

பூசத் திருநாள், ஆடிக் கிருத்திகை, ஐப்பசி சஷ்டி, வைகாசி விசாகம், பங்குனி உத்திரம் என தமிழ் கடவுள் முருகப்பெருமானுக்கு திருவிழாக்கள் ஏராளமாக உள்ளது. இந்த விழாக்களில் மிக முக்கியமானது தைப்பூசத் திருவிழாவாகும். தை மாதத்தில் வருகிற பூசத் திருநாள் தைப்பூச விழாவாக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

இந்தநாளில் முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் விமரிசையாக நடைபெறும். அதுமட்டுமின்றி, முருகப்பெருமான் குடி கொண்டிருக்கும் தலங்களில் விசேஷ பூஜைகள் நடைபெறும். இந்நிலையில், உலகெங்கும் உள்ள முருகக் கடவுளின் ஆலயத்தில் தைப்பூசத் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், தமிழ்நாட்டின் அறுபடை வீடுகளிலும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் பெருந்திரளாக ஒன்று திரண்டு பல்வேறு வகையான காவடிகளுடன் பாதயாத்திரையாக வந்து தைப்பூச திருநாளில் முருகப் பெருமானை மனமுருக பக்தர்கள் வேண்டி தரிசனம் செய்தனர். தைப்பூச திருநாளில் பல்வேறு கோவில்களில் தேரோட்ட நிகழ்வும் நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், கொற்கை ஊராட்சி தலைக்காடு ஸ்ரீபழனி ஆண்டவர் திருக்கோயில் தைப்பூச முக்கிய நிகழ்வான அடப்பாற்றில் தீர்த்தவாரி நிகழ்ச்சி மிக விமர்சையாக பல ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் திரளான பக்தர்கள் மற்றும் பெண்கள் அதிகளவில் கலந்து கொண்டனர். பெண்கள் நவதானிய முளைப்பாரி எடுத்து சுவாமி வீதி உலாவாக ஆட்டம் பாட்டத்துடன் சுவாமி நான்கு புறமும் சுற்றி வந்து தீர்த்த நீர் எடுத்து பூஜை செய்து தீர்த்தவாரி நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. அதிக அளவில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

மேலும் தைப்பூச திருவிழாவை கண்டுகளிக்க வெளியூரிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கோவில் நிர்வாகத்தின் மூலம் கோயில் செயல் அலுவலர் மற்றும் கிராம கமிட்டி முக்கியஸ்தர்கள் மூலம் நிகழ்ச்சி சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் அன்னதானம் மற்றும் வானவேடிக்கை நிகழ்ச்சி மற்றும் ஆட்டம் பாட்டத்துடன் நாதஸ்வர கெட்டிமேளத்துடன் சிறப்பான நிகழ்ச்சி நடைபெற்றது. கூடியிருந்த பக்தர்களுக்கு பாதுகாப்பிற்காக காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.