NLC தொழிலாளர்களுக்கு NOC வழங்கியதில் முறைகேடு ஏட்டு உள்பட 3 பேர் பணியிடை நீக்கம்

NLC தொழிலாளர்களுக்கு NOC வழங்கியதில் முறைகேடு தொடர்பாக விசாரணைக்கு பயந்து ஏட்டு எலிபேஸ்ட் சாப்பிட்டதாக நாடகமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக ஏட்டு உள்பட 3 காவல் துறையினர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கடலூர் மாவட்டம், ஊமங்கலம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருபவர் சுதாகர். இவர் கடந்த 1993-ஆம் ஆண்டு முதல் காவல்துறையில் பணியாற்றி வருகிறார். NLC யில் பணிபுரியும் ஒவ்வொரு ஒப்பந்த தொழிலாளரும் ஆண்டுதோறும் அவர்கள் பகுதியில் உள்ள காவல் நிலையங்களுக்கு சென்று எந்த வழக்கும் இல்லை என்று NOC பெற்று பணி இடத்தில் கொடுக்க வேண்டும்.

அந்த வகையில் NLC ஒப்பந்த தொழிலாளர்கள் சிலருக்கு சான்றிதழ் வழங்கியதில் ஊமங்கலம் தலைமை காவலர் சுதாகர், எழுத்தர் ஜோசப், எஸ்பி தனிப்பிரிவு ஏட்டு சங்குபாலன் ஆகியோர் ஆவணங்களை திருத்தி முறைகேடு செய்து சான்றிதழ் வழங்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஏட்டு சுதாகர் உள்ளிட்ட 3 பேர் மீதும் துறைரீதியான விசாரணை நடந்து வருகிறது.

விசாரணைக்காக ஏட்டு சுதாகர் கடந்த 11-ஆம் தேதி நெய்வேலி காவல் துணை கண்காணிப்பாளர் சபியுல்லாவை சந்திக்க துணை கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு சென்றுள்ளார். பின்னர் காவல் துணை கண்காணிப்பாளரை சந்திக்கும் போது, தான் எலிபேஸ்ட் சாப்பிட்டு விட்டதாக கூறி உள்ளார்.

இதைதொடர்ந்து அங்குள்ள காவல்துறையினர் அவரை நெய்வேலி பொதுமருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதற்கிடையே ஆவணங்கள் முறைகேடு புகாரில் உயர் அதிகாரியின் விசாரணைக்கு பயந்து ஏட்டு சுதாகர் எலி பேஸ்ட் சாப்பிட்டதாக நாடகமாடியது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து சுதாகர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் தனிப்பிரிவு ஏட்டு சங்குபாலன், காவல்நிலைய எழுத்தர் ஜோசப் ஆகிய 3 பேரையும் நெய்வேலி காவல் துணை கண்காணிப்பாளர் சபியுல்லா பரிந்துரையின் பேரில், கடலூர் காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் நேற்று பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

பிரதமர் வீட்டு வசதி திட்ட நிதியில் முறைகேடு..! உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்..!

நாடு முழுவதும் ஏழை, எளிய மக்களின் வாழ்வாரத்தை கணக்கில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் வீடு கட்டும் திட்டத்தை செயல்முறை படுத்தி வருகின்றது. ஆனால் எதிலும் ஊழல் செய்வதில் கரைதேர்ந்த ஊழல்வாதிகள் இந்த துறையும் விட்டு வைக்கவில்லை. ஆகையால், நட்டில் பல இடங்களில் ஊழல்வாதிகள் பிடிபடுவது வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது.

அதன்வரிசையில் பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை கையாடல் செய்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி கங்காதரன் என்பவர் 2021.-ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தொடர்ந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் மற்றும் பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் அரசு பிளீடர் எட்வின் பிரபாகர் ஆஜராகி, முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் அப்போதைய இணை இயக்குனர் ஈஸ்வரன் விசாரணை நடத்தி 13 அதிகாரிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை தரப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் அடிப்படையில் விரைவில் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும், கையாடல் செய்த பணத்தை வசூலிக்கும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

மாவட்ட பதிவாளர் பணியிடை நீக்கம்: போலி அனுமதி எண் வைத்து தணிக்கையில் முறைகேடு..!

சென்னை பதிவுத்துறை பயிற்சிப் பிரிவில் மாவட்ட பதிவாளராக இருப்பவர் அகிலா. இவர், காஞ்சிபுரத்தில் 2017-ம் ஆண்டு முதல் 2019 வரை தணிக்கை மாவட்ட பதிவாளராக பணியாற்றி வந்தார். அப்போது, காஞ்சிபுரம் இணை-4 சார்பதிவாளர் அலுவலகத்தில் சுதர்சனம் நகர் பகுதியில் மதிப்புநிர்ணயம் செய்யாமலும், போலி அப்ரூவல் எண்ணை வைத்து 165 மனைகளை பதிவு செய்ததாக நகரமைப்பு பிரிவில் இருந்து பதிவுத்துறைக்கு புகார் எழுந்தது.

மேலும் இவரது பணி காலத்தில் அளவுக்கு அதிகமாக அங்கீகாரம் இல்லாத மனைகளை பதிவு செய்து இதை தணிக்கை செய்யாமல் விட்டுவிட்டதாகவும் புகார்கள் எழுந்தன. இதுமட்டுமின்றி பல சட்டவிரோத ஆவணங்களை தணிக்கை குறிப்புரையில் சேர்க்காததாலும் இவர் மீது லஞ்ச ஒழிப்பு காவல்துறையில் புகார் செய்யப்பட்டது. இதனால் மாவட்ட பதிவாளர் அகிலா மீது லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், மாவட்ட பதிவாளர் அகிலா பணி ஓய்வு பெறுவதாக இருந்தது. இதனால் மாவட்ட பதிவாளர் அகிலா லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில் இருப்பதால், அவருக்கு பணி ஓய்வு வழங்கக் கூடாது என்று லஞ்ச ஒழிப்புத்துறையில் இருந்து பதிவுத்துறைக்கு கடிதம் எழுதப்பட்டது. இதை தொடர்ந்து அகிலாவை, பதிவுத்துறை தலைவர் ஆலிவர் பொன்ராஜ் நேற்று பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.