சென்னை வர்த்தக மையத்தில் “உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024” நிறைவு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த உலக மூதலீட்டாளர் மாநாட்டின் மூலமாக, தமிழ்நாட்டினுடைய 20 ஆண்டுகால வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் இறுதி செய்யப்பட்ட மொத்த முதலீடுகள் 6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி ரூபாய் இந்த முதலீடுகள் மூலம், நேரடி வேலைவாய்ப்பு என்ற வகையில், 14 லட்சத்து 54 ஆயிரத்து 712 நபர்களுக்கும், மறைமுக வேலைவாய்ப்பு என்ற வகையில், 12 லட்சத்து 35 ஆயிரத்து 945 நபர்களுக்கும் என மொத்தம் 26 லட்சத்து 90 ஆயிரத்து 657 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கரூர் மாவட்டத்தில் இருந்து முருங்கை இலையை பதப்படுத்தி கேப்சூல் வடிவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் இன்று கையெழுத்தாகியுள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் கரூரில் சர்வதேச முருங்கை கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் செந்தில் பாலாஜி, இந்த கண்காட்சி நடைபெறுவதற்கு காரணமாக இருந்தார். அவரே, வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துக்கு அழுத்தம் கொடுத்து கரூரில் முருங்கை கண்காட்சி நடைபெறச் செய்தார்.
இந்த முருங்கை கண்காட்சியில் நூற்றுக்கணக்கான முருங்கை விவசாயிகளும், பிரேசில், ஜெபர் கஸ்பர், ஜப்பான், கொரியா, ஸ்ரீலங்கா, மலேசியா, துபாய், லெபானன், நெதர்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து தொழில் முனைவோர்கள் பலரும் கலந்துகொண்டனர். இந்த கண்காட்சியின்போது, அமைச்சர் செந்தில் பாலாஜியின் கோரிக்கையின்படி கரூரில் முருங்கை பார்க் அமைக்கப்படும் எனவும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவித்தார்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் முருங்கை விவசாயம் பிரதானமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொடி முருங்கை, செடி முருங்கை, மர முருங்கை, மூலனூர் முருங்கை என பல்வேறு வகை முருங்கை விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விதை விதைத்தும், முருங்கைக் கன்று நட்டு வைத்தும் முருங்கை உற்பத்தி கரூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அரவக்குறிச்சி சுற்று வட்டார பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள், முருங்கை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு முருங்கை சாகுபடியே வாழ்வாதாரமாக விளங்குகிறது. கரூர் மாவட்டத்தில் இருந்து வெளிநாடுகளுக்கும் முருங்கைக் கீரை, முருங்கைக்காய், முருங்கைப் பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தற்போது, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலமாக கரூர் மாவட்ட முருங்கை விவசாயிகள் பயன்பெற உள்ளனர். இதற்கான முன்னெடுப்பை மேற்கொண்டு முருங்கை விவசாயிகளுக்கான மாநாடு, கருத்தரங்கம், கண்காட்சி நடத்திய செந்தில் பாலாஜி தற்போது சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.