கஸ்தூரி கேள்வி “கணக்கு பாடம் கஷ்டம்ல.. அதை தூக்கிறலாமா..!”

“கணக்கு பாடம் கஷ்டம் என்று அதனை பாடத் திட்டத்தில் இருந்து நீக்கிவிட முடியுமா?” என மும்மொழிக் கொள்கை விவகாரம் தொடர்பாக நடிகை கஸ்தூரி கருத்து தெரிவித்தார். கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் நேற்று இரவு அந்தணர்கள் பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், நடிகை கஸ்தூரி, புரட்சித் தமிழகம் கட்சியை சார்ந்த ஏர்போர்ட் மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு நடிகை கஸ்தூரி பதிலளித்தார். அப்போது, “நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு என்று இல்லாத ஒன்றை முன்வைத்து தேசிய அளவில் தனது கருத்துக்கு நான்கு பேர் தேவை என தமிழக முதல்வர் கூட்டங்கள் நடத்தி வருகிறார். நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு என்று மத்திய அமைச்சருக்கு தெரியாததை கூட இவர்கள் பேசி வருகின்றனர். தொகுதி மறு சீரமைப்பு என மத்திய அரசின் திட்டத்தில் இல்லாதது. அதை இவர்கள் இருப்பதாக கூறி வருகின்றனர்.

இந்தியாவில் மும்மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் தமிழ்நாட்டைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் பிரச்சனை இல்லை. ஆனால், தமிழக அரசு மும்மொழிக் கொள்கைக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. நான் தெலுங்கானாவில் வசிக்கிறேன். எனது குழந்தை படிக்கும் பள்ளியில் தெலுங்கு கட்டாயம். மற்ற மொழி பாடங்கள் அவரவர் விருப்பம் என உள்ளது.

மொழி கற்பதை மாணவர்களுக்கு அழுத்தம் என்று கூறினால் பிற பாடங்களை எப்படி மாணவர்கள் படிக்க முடியும்? கணக்கு பாடம் கஷ்டம் என்று அதனை பாடத் திட்டத்தில் இருந்து நீக்கிவிட முடியுமா? இலகுவான முறையில் கற்க பாடத்திட்டத்தை மாற்றியமைக்க வேண்டுமே தவிர அதனை நீக்க முடியாது” என நடிகை கஸ்தூரி தெரிவித்தார்.

விஜய் கண்டனம்: மும்மொழிக் கொள்கையை திணிப்பது மாநிலங்களின் தன்னாட்சி உரிமையைப் பறிப்பதாகும்..!

மும்மொழிக் கொள்கையை வலியத் திணிப்பது, மாநிலங்களின் தன்னாட்சி உரிமையைப் பறிப்பதன்றி வேறென்ன? என தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், “தேசிய கல்விக் கொள்கையை ஏற்க தமிழக அரசு மறுக்கிறது. அதனால் விதிமுறைகளின்படி எங்களால் நிதி ஒதுக்க முடியாது. தேசியக் கல்விக் கொள்கையில் மும்மொழி திட்டம் உள்ளது.

அதையேற்று தமிழ், ஆங்கிலத்துடன், கன்னடம் உட்பட ஏதேனும் ஒரு இந்திய மொழியை கற்பதில் என்ன தவறு உள்ளது. தேசிய கல்விக் கொள்கை உள்ளூர் மொழிக்கே முக்கியத்துவம் தருகிறது. தேசியக் கல்விக் கொள்கையை ஏற்கும் வரை விதிகளின்படி தமிழகத்துகு நிதி ஒதுக்க முடியாது.” என தர்மேந்திர பிரதான் கூறியிருந்தார்.

மும்மொழிக் கொள்கை குறித்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் கருத்துக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். அவர்களின் வரிசையில் தவெக தலைவர் விஜய்யும் இணைந்துள்ளார்.

இது தொடர்பாக விஜய் தனது எக்ஸ் பக்கத்தில், “மும்மொழிக் கொள்கையை வலியத் திணிப்பது, மாநிலங்களின் தன்னாட்சி உரிமையைப் பறிப்பதன்றி வேறென்ன? ஜனநாயகத்தின் நான்காவது தூணான இதழியல் துறைக்கு உரியதான பத்திரிகை சுதந்திர தர்மம் காக்கப்பட வேண்டும். நூற்றாண்டு காணும் விகடனின் இணையத்தளப் பக்கம் முடக்கப்பட்டதற்கு ஒன்றிய அரசுதான் காரணம் என்கிற கருத்து நிலவுகிறது. பத்திரிகை, ஊடகங்களால் வெளியிடப்படும் கருத்துகள் தவறானவையாகவோ, குற்றம் சுமத்துபவையாகவோ இருந்தால் நீதிமன்றம் மூலம் தீர்வு காண வேண்டுமே தவிர, கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் வகையில் செயல்படுவது, அரசியல் சாசன உரிமையைக் கேள்விக்குறி ஆக்குவதன்றி வேறென்ன?

மாநில மொழிக் கொள்கைக்குச் சவால் விடுத்து, தமிழகத்திற்கு நிதி ஒதுக்கமாட்டோம் என்று பகிரங்கமாக அறிவிப்பதும், விகடன் இணையத்தளப் பக்கத்தை முடக்கியதும் ஜனநாயகத்திற்கு எதிரான, கண்டனத்திற்கு உரிய ஃபாசிச அணுகுமுறையே. ஃபாசிச அணுகுமுறைகளை எந்த வடிவத்தில் யார் கையிலெடுத்தாலும் அது ஒன்றிய அரசாக இருந்தாலும், மாநில அரசாக இருந்தாலும் மக்கள் பக்கம் நின்று தமிழக வெற்றிக் கழகம் எந்நாளும் தீர்க்கமாக எதிர்க்கும்.” எனப் பதிவிட்டுள்ளார்.