சேலம் தெற்கு தாலுகாவில் முதியோர் உதவித்தொகையில், 89.18 லட்சம் ரூபாய் மோசடி நடந்துள்ளது. இதுதொடர்பாக மாநகர் மத்திய குற்றப்பிரிவு காவல்துறை வழக்குப்பதிந்து, சேலம் பஞ்சந்தாங்கி ஏரியை சேர்ந்த திருநங்கையர் சாந்தி, மாதம்மாள், வீராணம் அடுத்த பாலப்பட்டியை சேர்ந்த பவித்ரா, ஆகியோரை கைது செய்தனர்.
கடந்த, 2020 அக்டோபரில் இருந்து, இந்த மோசடி நடந்திருப்பதால் அப்போது, சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக பணியாற்றிய முத்துலட்சுமி, அறிவுடை நம்பி, உதவியாளர் கிரிஜாவிடம், நேற்று, தனித்தனியே விசாரணை நடந்தது. குற்றப்பிரிவு உதவி கண்காணிப்பாளர் சூர்யா விசாரணை நடத்தினார். தற்போது முத்துலட்சுமி, சேலம் மைய தாலுகா வட்ட வழங்கல் அலுவலராகவும், அறிவுடை நம்பி சங்ககிரி ரெகுலர் தாசில்தாராகவும், கிரிஜா சேலம் ஆட்சியர் அலுவலக நில எடுப்பு பிரிவிலும் வேலை செய்து வருகின்றனர்.
இதுகுறித்து தாசில்தார்கள் கூறுகையில், தெற்கு தாலுகாவில், 29,000 பேர் உதவித்தொகை பெறுகின்றனர். உரிய பயனாளிக்கு, உதவித்தொகை பட்டுவாடா செய்ய, வங்கிக்கு கட்டணம் தலா, 30 ரூபாய், அஞ்சல்துறைக்கு, தலா, 50 ரூபாயை மாதந்தோறும் தனி தாசில்தார் மூலம் செலுத்த வேண்டும்.
இதில் வங்கிக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தில் முறைகேடு நடந்துள்ளது. இதுதொடர்பாக வங்கி நிர்வாகம் கேள்வி கேட்காதது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. 2021 மார்ச், 31-ல் நடந்த தணிக்கையில் இந்த மோசடி சுட்டிக்காட்டப்பட்டும், சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர்கள் கண்டுகொள்ளாததும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் கைதானவர்களை, நீதிமன்ற காவலில் எடுத்து காவல்துறை விசாரித்தால் மட்டும் மோசடி நடந்த விதம் வெளிச்சத்துக்கு வரும் என தெரிவித்தனர்.