பொள்ளாச்சி தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்த பிறந்தநாள் பரிசு என்று நான் நினைக்கிறேன்” என .முக்குலத்தோர் புலிப்படை நிறுவுனத் தலைவர் கருணாஸ் தெரிவித்தார். தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி ஆனைமலை அருகே உள்ள சின்னப்பாளையம் அருகில் 2019-ஆம் ஆண்டு மாணவிகள், இளம் பெண்களை என பலரையும் பாலியல் ரீதியாக துன்புறுத்தி வீடியோ எடுத்து மிரட்டப்பட்ட சம்பவம் அம்பலமானது.
இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து வழக்கை CBI விசாரித்த நிலையில், 9 பேர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் இரண்டாம் குற்றவாளியான திருநாவுக்கரசு மற்றும் ஐந்தாம் குற்றவாளியான மணிவண்ணன் ஆகியோரின் ஐபோன் மற்றும் லேப்டாப்பில் இருந்து நூற்றுக்கணக்கான வீடியோக்கள் கைப்பற்றப்பட்டன.
கடந்த மாதம் விசாரணை முடிவடைந்த நிலையில், நேற்று கோயம்புத்தூர் மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி நந்தினி தேவி அறிவித்தார். அதில் பொள்ளாச்சி கூட்டு பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என்று அறிவித்தார். குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் என வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்த வழக்கின் முதல் குற்றவாளியான சபரிராஜனுக்கு 4 ஆயுள் தண்டனையும், இரண்டாம் குற்றவாளியான திருநாவுக்கரசு மற்றும் ஐந்தாம் குற்றவாளியான மணிவண்ணனுக்கு தலா 5 ஆயுள் தண்டனையும் அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, மூன்றாம் குற்றவாளியான சதீஷ் மற்றும் ஏழாவது குற்றவாளியான ஹேரன் பால் ஆகியோருக்கு தலா 3 ஆயுள் தண்டனையும் அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் நான்காவது குற்றவாளியான வசந்தகுமாருக்கு 2 ஆயுள் தண்டனையும், ஆறாம் குற்றவாளியான பைக் பாபு, எட்டாம் குற்றவாளியான அருளானந்தம் மற்றும் ஒன்பதாம் குற்றவாளியான அருண் குமார் ஆகியோருக்கு தலா ஒரு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. சாகும் வரை ஆயுள் தண்டனை என்பதால், ஒரு ஆயுள் தண்டனையும், 5 ஆயுள் தண்டனையும் ஒன்றுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நேற்று திருநெல்வேலியில் செய்தியாளர்களின் கேள்விக்கு கருணாஸ் பதிலளித்தார். அப்போது, “அதிமுக ஆட்சிக்காலத்தில் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் புகார் கொடுத்த பெண்ணின் விவரங்களை வெளியிட்டார்கள். இது எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிக்காலத்தில் நடந்த அருவருப்பான செயல். இதில் அவரது கட்சிக்காரர்களின் பிள்ளைகள் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள் என்று வழக்கின் விசாரணையை நடத்தாமல் முடக்கி வைத்து இருந்தனர்.
இன்று மக்கள் சட்டத்தின் மீது வைத்திருந்த நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் நீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளது. என்னை பொறுத்தவரை பொள்ளாச்சி வழக்கின் நீதிமன்ற தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்த பிறந்தநாள் பரிசு என்று நான் நினைக்கிறேன்” என கருணாஸ் தெரிவித்தார்.