மாவட்ட பதிவாளர் பணியிடை நீக்கம்: போலி அனுமதி எண் வைத்து தணிக்கையில் முறைகேடு..!

சென்னை பதிவுத்துறை பயிற்சிப் பிரிவில் மாவட்ட பதிவாளராக இருப்பவர் அகிலா. இவர், காஞ்சிபுரத்தில் 2017-ம் ஆண்டு முதல் 2019 வரை தணிக்கை மாவட்ட பதிவாளராக பணியாற்றி வந்தார். அப்போது, காஞ்சிபுரம் இணை-4 சார்பதிவாளர் அலுவலகத்தில் சுதர்சனம் நகர் பகுதியில் மதிப்புநிர்ணயம் செய்யாமலும், போலி அப்ரூவல் எண்ணை வைத்து 165 மனைகளை பதிவு செய்ததாக நகரமைப்பு பிரிவில் இருந்து பதிவுத்துறைக்கு புகார் எழுந்தது.

மேலும் இவரது பணி காலத்தில் அளவுக்கு அதிகமாக அங்கீகாரம் இல்லாத மனைகளை பதிவு செய்து இதை தணிக்கை செய்யாமல் விட்டுவிட்டதாகவும் புகார்கள் எழுந்தன. இதுமட்டுமின்றி பல சட்டவிரோத ஆவணங்களை தணிக்கை குறிப்புரையில் சேர்க்காததாலும் இவர் மீது லஞ்ச ஒழிப்பு காவல்துறையில் புகார் செய்யப்பட்டது. இதனால் மாவட்ட பதிவாளர் அகிலா மீது லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், மாவட்ட பதிவாளர் அகிலா பணி ஓய்வு பெறுவதாக இருந்தது. இதனால் மாவட்ட பதிவாளர் அகிலா லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில் இருப்பதால், அவருக்கு பணி ஓய்வு வழங்கக் கூடாது என்று லஞ்ச ஒழிப்புத்துறையில் இருந்து பதிவுத்துறைக்கு கடிதம் எழுதப்பட்டது. இதை தொடர்ந்து அகிலாவை, பதிவுத்துறை தலைவர் ஆலிவர் பொன்ராஜ் நேற்று பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.