தமிழ்நாடு, விருதுநகரில் நேற்று நடந்த மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் மாணிக்கம் தாகூர் எம்பி பங்கேற்றார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பிரதமர் மோடி தூத்துக்குடி மக்களின் துயரத்தை விமானத்தில் இருந்து பார்க்காமல் நேரில் மக்களை சந்திக்க வேண்டும். 2024 ஜனவரியில் மோடி திறக்க உள்ள திருச்சி விமான நிலையத்தை, 2025-ல் அதானியிடம் கொடுக்க உள்ளார். முதல் தனியார் விமான நிலையமாக திருச்சி விமான நிலையம் மாற உள்ளது. தனியார்மயமாக்கலை நிறுத்த மோடிக்கு விடை கொடுக்க வேண்டும்.
முதலமைச்சரை குறை கூறும் தமிழிசை, தூத்துக்குடியில் 15 நிமிடம் இருந்திருப்பாரா? வாயில் வடை சுடுவதில் நிர்மலா சீதாராமனுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம். அவர் வேண்டாத அரசியல் பேசுகிறார். 5 ஆண்டாக நிதியமைச்சர் பொறுப்பில் இருந்து கொண்டு, அதற்கு தகுதியானவராக செயல்படவில்லை. வெள்ளத்தில் மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு நிதி நிலையில் முதல்கட்டமாக என்ன வழங்க முடியுமோ அதை வழங்கி உள்ளது. மத்திய அரசு தான் முழுமையாக வழங்க வேண்டும். மத்திய அரசு நிதி கொடுக்காமல் எதுவும் செய்வது சாத்தியமல்ல. மத்திய அரசு தமிழக மக்களை வஞ்சிப்பதை நிறுத்த வேண்டும் என மாணிக்கம் தாகூர் எம்பி தெரிவித்துள்ளார்.