மேற்கு வங்கத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் வைவாவின் போது அந்த பெண்ணிடம் நீ பிராமினா.. முகத்திற்கு எந்த க்ரீம் யூஸ் பண்ற என்றெல்லாம் கேள்வி கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மீண்டும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் கடந்த மாதம் நடந்த ஆர்ஜி கர் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் கொடூரமாகப் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தி அந்த சம்பவம் இன்றும் அடங்கவில்லை. இதற்கிடையே மேற்கு வங்கத்தில் உள்ள மற்றொரு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மற்றொரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது அங்குள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் வைவா தேர்வின் போது மாணவி ஒருவரிடம் கேட்ட கேள்விகள் சர்ச்சையாக வெடித்துள்ளது. வைவாவுக்கு வந்த ஆசிரியர் முறையற்ற கேள்விகளைக் கேட்டதாகப் புகார் எழுந்துள்ளது. இது தொடர்பான வீடியோ விஸ்வ ஹிந்து பரிஷத்தின் மாநில ஊடகப் பொறுப்பாளர் பகிர்ந்துள்ளார். அதில் வைவாவின் போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்வது தெளிவாகத் தெரிகிறது.
அங்குள்ள சாகர் தத் மருத்துவக் கல்லூரியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாகப் பரவும் வீடியோவில் ஒரு பெண், “எனக்கு முன்னால் வந்த ஆணுக்கு சில நிமிடங்களில் வைவா முடிந்துவிட்டது. ஆனால், என்னிடம் மட்டும் சம்பந்தமே இல்லாத கேள்விகளை எல்லாம் கேட்டார்.
குடும்ப உறுப்பினர்கள் குறித்து எல்லாம் கேட்டார்கள்.. அது கூட ஓகே.. அதன் பிறகு கேட்ட கேள்வி தான் மோசம்.. நீ ஒரு பிராமினா? இப்போ முகத்தில் என்ன கிரீம் போட்டு இருக்க? என்று கேட்கிறார். அது மட்டுமின்றி உதட்டில் என்ன போட்டு இருக்க என்று அத்துமீறிக் கேட்கிறார். இது வைவா தேர்வா இல்லை வேறு எதாவது” என்று சரமாரியாகக் கேட்கிறார்.