வெற்றிகரமாக ஏவப்பட்ட ரூமி-1 ராக்கெட் பூமிக்கு திரும்பி சாதனை..!

விண்ணில் செயற்கைக்கோள்களை நிலைநிறுத்திய பின் மீண்டும் பூமிக்கு திரும்பும் ரூமி எனும் சிறிய ரக ஹைப்ரிட் ராக்கெட் ஸ்பேஸ் ஸோன் இந்தியா நிறுவனம் மற்றும் மார்ட்டின் குழுமம் சார்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தியாவிலேயே முதன்முறையாக மிஷன் ரூமி – 2024 என்ற திட்டத்தின் மூலம் 3 செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்திய பிறகு, மறுபயன்பாட்டு ராக்கெட்டை மீண்டும் பூமிக்கு திருப்பிக் கொண்டுவர திட்டமிடப்பட்டது.

அதன்படி 3 க்யூப் செயற்கைக்கோள்களுடன் ரூமி-1 ராக்கெட் சென்னை ஈசிஆர் சாலையில் உள்ள பட்டிபுலம் என்ற இடத்தில் இருந்து நடமாடும் ஏவுதளம் மூலமாக நேற்று காலை 7.25 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. திட்டமிட்டபடி தரையில் இருந்து 35 கி.மீ. உயரத்துக்குச் சென்ற பின்னர் 3 செயற்கைக்கோள்களும் அதிலிருந்து பிரிந்துவிட்டன. அதன்பின்னர் ராக்கெட் பாராசூட் உதவியுடன் மீண்டும் தரைப் பகுதிக்கு பத்திரமாக திரும்பி சாதனை படைத்தது.

தற்போது ஏவப்பட்ட 3 செயற்கைக்கோள்களும் வானில் 8 மணி நேரம் வரை வலம் வந்து காஸ்மிக் கதிர்வீச்சு, புற ஊதா கதிர்வீச்சு, காற்றின் தரம், வளிமண்டல மாற்றங்கள் கண்காணிப்பு மற்றும் அவை தொடர்பான தரவுகளை சேகரிக்கும். இதுதவிர அதிர்வலைகள், ஓசோன் அளவு, காற்றின் நச்சுத்தன்மை, வளிமண்டல நிலையை அறிந்து கொள்வதற்காக 50 சிறிய ஆய்வுக் கருவிகளும் ராக்கெட்டில் அனுப்பப்பட்டன. இவை சுற்றுச்சூழல் குறித்த புரிதலை மேம்படுத்த உதவும்.

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானிகள் வழிகாட்டுதலில் பல்வேறு நிபுணர்களின் ஒன்றரை ஆண்டுகால உழைப்பில் ரூமி ராக்கெட் உருவானது. இந்த ராக்கெட் உதிரிபாகங்களை இணைக்கும் பணியில் 6,000 பள்ளி மாணவர்களும் ஈடுபடுத்தப்பட்டனர்.

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேசுகையில், ‘‘இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டு மீண்டும் பூமிக்கு வந்திருப்பது நமது அடுத்த தலைமுறை விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களின் எல்லையில்லா ஆற்றலை நிரூபிக்கிறது. விண்வெளியில் இந்தியாவை புதிய உயரத்துக்கு கொண்டுசென்ற ஸ்பேஸ் ஸோன் இந்தியா நிறுவனம் மற்றும் மார்ட்டின் குழுமத்துக்கு எனது வாழ்த்துகள். இந்த திட்டமானது சுற்றுச்சூழலுக்கு மிகவும் உகந்தது. விண்வெளி ஆய்வில் புதிய புரட்சிக்கான தொடக்கமாக இது இருக்கும்’’ என மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.

மயில்சாமி அண்ணாதுரை: பூமியில் குறைந்து வரும் எரிபொருளுக்கு மாற்று சக்தி நிலவில் உள்ளதா ..?

2008 -ம் ஆண்டு நிலவுக்கு ஏவப்பட்டு அதில் நீர் இருப்பதற்கான சுவடுகள் இருப்பதை கண்டுபிடித்த இந்தியாவின் சந்திரயான் 1 விண்கல திட்டத்தின் இயக்குநராக பணியாற்றியவர் தமிழ்நாட்டை சேர்ந்த மயில்சாமி அண்ணாதுரை. இவர் சந்திரயான் 3 திட்டம் தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்து இருக்கிறார்.

அப்போது பேசிய மயில்சாமி அண்ணாதுரை, “பூமியில் குறைந்து வரும் எரிபொருளுக்கு மாற்று சக்தி நிலவில் உள்ளது. இனி நிலாதான் வளைகுடா நாடுகளாகவும், அமெரிக்காவாகவும் இருக்கும். வளைகுடா நாடுகளுக்கு நாம் ஏன் செல்கிறோம். நிலவில் வெப்ப நிலையில் 50 டிகிரி இருந்து நாம் ஏன் அங்கு செல்கிறோம் என்றால், இங்கு உள்ளதை விட அங்கு அதிக ஊதியம் கொடுக்கிறார்கள் என்பதால்தான்.

ஏன், அங்கு அதிக ஊதியம் கொடுக்கிறார்கள்? அங்கு எண்ணெய் வளம் உள்ளது. எண்ணெய் வளத்தை எடுப்பதற்காக வழங்குகிறார்கள். அங்கு நீரே இல்லை. இருப்பினும் எவ்வளவோ தூரத்தில் கடல் இருந்தாலும், அந்த நீரை கொண்டு வந்து பெரிய நகரங்களை உருவாக்குகிறார்கள். எல்லாவற்றுக்கும் மூலக் காரணம் மற்ற இடங்களில் இல்லாத அளவுக்கு அங்கு உள்ள எண்ணெய் வளம்.

மனித சமுதாயம் தன்னுடைய நாகரீகத்தை தொடங்கியது நீரை ஒட்டிதான். இப்போது இந்த இரண்டையும் சேர்த்து நான் பார்க்கிறேன். நிலவில் தென் துருவம் என்பது இரண்டும் சேர்ந்த ஒன்று. நிலவில் மற்ற இடங்களில் உள்ளதை விட நீர் அதிகம் உள்ள இடம் துருவ பகுதி. இப்போதுள்ள எண்ணெய் வளம் குறையும்போது நமக்கு ஒரு வளம் தேவை.

அந்த வளம் இருக்கும் இடம் நிலவு. அருகில் நீரும் உள்ளது. இரண்டும் சேரும்போது நிலவின் தென் துருவத்தை அடுத்த ஒரு அமெரிக்க கண்டமாக நான் பார்க்கிறேன். இந்தியாவுக்காக மாற்றுவழி கண்டுபிடிக்க மேற்கு நோக்கி சென்ற கொலம்பஸ் தவறுதலாக கண்டுபிடித்த நாடுதான் அமெரிக்கா. அந்த அமெரிக்கா கண்டுபிடிக்க தவறிய நிலவில் நீரை இந்தியா கண்டுபிடித்தது.

இந்த இரண்டையும் சேர்த்து பார்த்தோம் என்றால் இந்தியா நிலவில் கண்டுபிடித்தது அடுத்த அமெரிக்கா. இது இரண்டையும் சேர்த்து பார்க்கலாம் என்று நினைக்கிறேன். இப்போது எப்படி அமெரிக்காவை நோக்கி உலகில் உள்ள எல்லோரும், ஐரோப்பியர்களாக இருக்கலாம், ஆசிய கண்டத்தினராக இருக்கலாம், ஆஸ்திரேலியர்களாக இருக்கலாம். இவர்கள் எல்லோரும் எப்படி போகிறார்களோ, அதுமாதிரி இப்போது எல்லா விஞ்ஞானிகளும் நிலவை நோக்கி போய்கொண்டு இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.” என்றார்.