பட்டியலின பெண் ஊராட்சி தலைவர் உட்கார நாற்காலி தர மறுப்பு..! அன்று கொடியேற்றும் உரிமை பறிப்பு..!

மத்தியப் பிரதேசத்தில் மோகன் யாதவ் தலைமையிலான பாஜக ஆட்சி செய்து வருகின்றது. மோகன் யாதவ் பதவியேற்று ஓராண்டு கூட நிறைவடையாத நிலையில் இங்கு பல மதவாத, சாதியவாத சிக்கல்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. சில வாரங்களுக்கு முன்பு, உயர்கல்வி பாடதிட்டத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர்களின் புத்தகங்களை இடம்பெற வைத்து மோகன் யாதவ் தலைமையிலான பாஜக அரசு உத்தரவிட்டது.

மோகன் யாதவ் தலைமையிலான பாஜக அரசு அடக்குமுறைவாத எண்ணங்கள் பரப்பப்பட்டு, பல வகையில் சிறுபான்மையினர் அவதிக்குள்ளாகியுள்ளனர். அவ்வகையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவரும், வகுப்புவாத நடவடிக்கையால் பாதிப்பிற்குள்ளாகியுள்ளார். அதன் வெளிப்பாடாக, ஊராட்சி தலைவராக பதவி வகித்திருக்கும் நிலையிலும், அவர் பட்டியலின பெண் என்ற காரணத்தால், ஊராட்சி அலுவலகத்தில் உட்கார நாற்காலி தர மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுப்பு தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், நாற்காலியில் உட்கார விரும்பினார் வீட்டிலிருந்து நாற்காலி கொண்டு வரும்படியும், இல்லையென்றால் தரையில் உட்காரும் படியும் தெரிவித்துள்ளனர், இதர அலுவலகர்கள். இதே பெண்ணிற்கு, விடுதலை நாள் அன்று கொடியேற்றும் உரிமையும் பறிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இதனை சுட்டிக்காட்டி, தனது X தளத்தில் பதிவிட்ட காங்கிரஸ் கட்சி, “இது போன்ற சமூகநீதிக்கு எதிரான எண்ணத்தை தூக்கிப்பிடிக்கிற தன்மைக்கு எதிராக உடனடி நடவடிக்கை வேண்டும். மோடி ஆட்சியில் நீடிக்கிற Anti-Dalit மனப்பான்மை அறவே ஒழிக்கப்பட வேண்டும். அனைவருக்குமான உரிமை காக்கப்பட வேண்டும்” என பதிவிட்டுள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் தொடரும் கொடூரங்கள்…! காலை நக்கவைத்த கொடூரம்…!

மத்திய பிரதேச மாநிலத்தில் சித்தி என்ற இடத்தில் பழங்குடியின தொழிலாளி தஷ்மத் ராவத் மீது பாஜக நிர்வாகி பிரவேஷ் சுக்லா என்பவர் சிறுநீர் கழித்த சம்பவம் நாட்டையே உலுக்கி, பரபரப்பே இன்னும் ஓயாத நிலையில், ஓடும் காரில் இளைஞர்கள் சிலர் சேர்ந்து கொண்டு ஒருவரை மிக கடுமையாகத் தாக்குகின்றனர். அங்கிருந்த ஒருவர் வலுக்கட்டாயமாக அவரது கால்களை நக்க வைத்துள்ளனர். இது குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி டிரெண்டாகி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்தச் சம்பவத்திற்குப் பலரும் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர். குற்றவாளியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் அவர் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்தச் சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்துள்ள அம்மாநில உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா, இது தொடர்பாக ஏற்கனவே இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இது சம்பவத்தில் தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவித்தார்.