38 பவுன் நகையை ஆட்டைய போட்ட பெண் காவல் ஆய்வாளர் கைது.!

பரமக்குடியில் பணியாற்றிய காவல் ஆய்வாளர் கீதா, கடந்த பிப்ரவரி மாதத்தில் திருமங்கலம் மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றலானார். இவர் கணவரும் மதுரை மாவட்டத்தில் மற்றொரு காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றுகிறார்.

இந்நிலையில் ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வந்த திருமங்கலத்தைச் சேர்ந்த ராஜேஷ்-அபிநயாவுக்கு ஓராண்டுக்கு முன் திருமணம் நடந்து, பின்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் அது குறித்த குடும்ப வழக்கின் விசாரணை திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நடைபெற்று வந்தது.

தன்னுடைய 95 பவுன் நகைகளை கணவர் ராஜேஷிடமிருந்து வாங்கித் தரும்படி காவல் ஆய்வாளர் கீதாவிடம் அபிநயா தெரிவிக்க, உடனே ராஜேஷ் காவல் ஆய்வாளரிடம் நகைகளை ஒப்படைத்துள்ளார். ஆனால், அபிநயா நகையை கேட்கும்போதெல்லாம் ராஜேஷ் இன்னும் நகையைத் தரவில்லை என்றே சொல்லி ஏமாற்றி வந்துள்ளார்.

இந்த தகவல் தெரிந்து அதிர்ச்சியான ராஜேஷ், அப்போதே நகைகளை காவல் ஆய்வாளரிடம் கொடுத்து விட்டதாக அபிநயா குடும்பத்தினரிடம் தெரிவிக்க அதிர்ச்சி அடைந்த இரண்டு தரப்பினரும் காவல் ஆய்வாளர் கீதாவிடம் நகைகள் குறித்து கேட்க, அலட்சியமாகவும், அதட்டலாகவும் பதில் அளித்திருக்கிறார்.

கடந்த மே மாதம் திருமங்கலம் உதவிக் காவல் கண்காணிப்பாளரிடம் ராஜேஷ் புகார் செய்ய, விசாரணை நடத்தி நகைகளை உடனே ஒப்படைக்கும்படி எச்சரிக்கை செய்தும் 95 பவுனில் 20 பவுன் நகையை மட்டும் திருப்பிக் கொடுத்துள்ளார். காவல் கண்காணிப்பாளரிடம் ராஜேஷ் புகார் செய்ய காவல் ஆய்வாளர் கீதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

அதன் பின்பும் ஒருசில நகைகளை மட்டும் திருப்பி அளித்தவர், 32 பவுன் நகைகளை ஒப்படைக்காமல் இழுத்தடித்துக் கொண்டிருந்த நிலையில், காவல் ஆய்வாளர் கீதா மீது உயரதிகாரிகள் விசாரணை நடத்தியதில் அவர் மோசடி செய்திருப்பது உறுதியானதால் காவல்துறைத் துணைத் தலைவர் உத்தரவில் திருமங்கலம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.