கல்வி சேமிப்பு திட்டம் … ஏலச்சீட்டு நடத்தி ரூ.80 கோடி மோசடி..!

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் பஜார் வீதியில் ஜனார்த்தனன்‌ மற்றும் அவரது மனைவி சற்குணாம்மாள் மற்றும் இவர்களது மகன் யுகேந்தர் ஆகியோர் ஜே.எஸ் ஜுவல்லரி என்ற பெயரில் நகைக்கடை வைத்து நடத்தி வந்தனர். இவர்கள் தங்க நகை சேமிப்பு திட்டம், அமுத சுரபி சேமிப்பு திட்டம், கல்வி சேமிப்பு திட்டம் எனக்கூறி ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடமிருந்து சுமார் ரூ.80 கோடிக்கு மேல் வசூலித்தனர். இந்நிலையில், ஜனார்த்தனன் அவரது மகன் யுகேந்தர் ஆகிய இருவரும் தலைமறைவாகி உள்ளனர்.

சற்குணாம்மாள் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக உள்ளதால் அவர் அதே வீட்டில் வசித்து வருகிறார். அவரிடம் பணத்தை கொடுத்த பொதுமக்கள் கேட்டபோது எனக்கும், இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று கூறி உள்ளார். இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லஞ்சம் கேட்ட தமிழர் கட்சி ஊராட்சி தலைவர் கைது..!

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள இலத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சீவாடி ஊராட்சி. இதன் ஊராட்சி தலைவராக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ரங்கநாதன் உள்ளார். சீவாடி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் சென்னையை சேர்ந்த அப்துல்லா என்பவர் நிலம் வாங்கி இருந்தார். அப்துல்லா அந்த நிலத்தை வீட்டுமனை பிரிவுகளாக மாற்றுவதற்காக ஊராட்சியின் அங்கீகாரம் பெறுவதற்காக விண்ணப்பித்து இருந்தார்.

அப்போது ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதன், அந்த வீட்டு மனை பிரிவாக மாற்ற அங்கீகாரம் வழங்குவதற்கு ரூ..25 லட்சம் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத நிலத்தின் உரிமையாளர் அப்துல்லா சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்பு காவல்துறைருக்கு தகவல் தெரிவித்தார்.

லஞ்சஒழிப்பு காவல்துறையினர் அறிவுறுத்தல்படி அப்துல்லா முன்பணத்தை வழங்குவதாக கூறி நேற்று மாலை ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே ரங்கநாதனிடம் கொடுத்தார். அதனை ரங்கநாதன் வாங்கியபோது மறைந்து இருந்த சென்னையில் இருந்து வந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறை ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதனை அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவரை விசாரணைக்காக அழைத்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.