காவல் வாகனத்தில் மது அருந்திய SSI..! வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பு..!

காவல்துறை வாகனத்தில் மது அருந்திய ஆயுதப்படை காவலர் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகப் பரவிய நிலையில், அவரை பணியிடை நீக்கம் செய்து காவல்துறை உயரதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

சென்னை பரங்கிமலை ஆயுதப்படையில் லிங்கேஸ்வரன் என்பவர் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். சென்னையில் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களை காவல்துறை கைது செய்த பின்பு, அவர்களை சிறைக்கு அழைத்துச் செல்வது, சிறையில் இருந்து ஆஜர்படுத்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்வது போன்ற பணிகளில் ஆயுதப்படை காவலர்கள் ஈடுபடு வருகின்றனர்.

அந்தவகையில், கைதிகளை அழைத்துச் செல்லும் பொறுப்பில் இருந்த SSI லிங்கேஸ்வரன், காவல்துறை வாகனத்தில் சீருடை அணியாமல் அமர்ந்து, மது அருந்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த வீடியோவை அடிப்படையாக கொண்டு விசாரணை நடத்திய காவல்துறை உயரதிகாரிகள் SSI லிங்கேஸ்வரனை பணியிடை நீக்கம் செய்துள்ளனர்.

மேலும், SSI லிங்கேஸ்வரன் மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதுடன், அந்த வாகனத்தில் பயணித்த மற்ற காவலர்களில் யாரேனும் இவரோடு சேர்ந்து பணியின்போது மது அருந்தினார்களா என கோணத்தில் விசாரிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

வழக்கு போடாமல் இருக்க தலா 2 ஆயிரம்.. காவலரை சிக்க வைத்த ரயில்வே ஊழியர்கள்..!

தஞ்சாவூரை சேர்ந்த மணிவண்ணன், ரமேஷ் ஆகிய இருவரும் சென்னையை அடுத்த கிழக்கு தாம்பரத்தில் தங்கி, தாம்பரம் ரயில்வே யார்டில் தற்காலிக ஊழியராக வேலை செய்து வருகிறார்கள். மணிவண்ணன், ரமேஷ் இருவரும் ரயில்வே யார்டு பகுதியில் அமர்ந்து மது அருந்தி உள்ளார்கள். அப்போது அங்கு சாதாரண உடையில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர், தாங்கள் காவல்துறையினர் எனக்கூறி இருவரையும் தாக்கினர். மேலும் அவர்கள் மேல் வழக்கு போடாமல் இருக்க தலா ரூ.2 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.4 ஆயிரம் தரும்படி கேட்டார்களாம்.

ஆனால் கையில் பணம் இல்லாததால் மணிவண்ணன் அருகில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் பணத்தை எடுத்து கொடுத்திருக்கிறாராம். இருவரும் தாக்கியதில் காயம் அடைந்த மணிவண்ணன் மற்றும் ரமேஷ் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். காயத்துக்கான காரணம் குறித்து மருத்துவர் கேட்டபோது, நடந்த சம்பவத்தை கூறினர். இதனால் மருத்துவமனையில் இருந்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சேலையூர் காவலர்கள் நேரில் வந்து விசாரித்தனர்.

பின்னர் வழக்குப்பதிவு செய்து, ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் மணிவண்ணன் மற்றும் ரமேஷ் ஆகியோரை தாக்கி பணம் பறித்தது, தாம்பரம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக வேலை செய்து வரும் அருண்ராஜ் மற்றும் பிரண்ட்ஸ் ஆப் காவல்துறையில் வேலை செய்த சதீஷ்குமார் என்பதும் தெரியவந்தது. அதனை தொடர்ந்து அவர்கள் 2 பேரும் கைது செய்தனர்.

பின்னர் அவர்களிடம் நடத்தப்பட விசாரணையில் இவர்கள் இருவரும் பல்வேறு பகுதிகளில் இரவு நேரங்களில் சாலையோரம் மது அருந்துபவர்கள், ஜோடியாக நின்று பேசிக் கொண்டிருப்பவர்களை காவல்துறை என மிரட்டி பணம் பறித்தது விசாரணையில் தெரிய வந்தது.