4 -ஆம் வகுப்பு மாணவி பாலியல் தொல்லை..! 4 பேர் கைது… தலைமை ஆசிரியை தலைமறைவு..!

திருச்சி மாவட்டம், மணப்பாறையிலுள்ள மணப்பாறைபட்டி சாலையில் ஸ்ரீ குரு வித்யாலயா பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்தபள்ளியில் பயின்ற 4 -ஆம் வகுப்பு மாணவி பள்ளிக்கு வழக்கம் போல் சென்ற நிலையில் மதிய நேரத்தில் வகுப்பறையில் இருந்த மாணவியிடம் பள்ளியின் அறங்காவலரும் தாளாளர் சுதாவின் கணவர் வசந்தகுமார் என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது.

இதையடுத்து மாலையில் பள்ளி முடித்து விட்டு வீட்டிற்கு சென்ற மாணவி நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளிக்கு சென்று வசந்தகுமாருக்கு தர்ம அடி கொடுத்தனர். மேலும் சம்பவம் பற்றி தகவல் அறிந்த மணப்பாறை காவல்துறை சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதுடன் வசந்த குமாரை மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர் மற்றும் பள்ளி நிர்வாகிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி மாணவியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் பள்ளி முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதோடு ஆத்திரத்தில் பள்ளிக்குள் புகுந்த அலுவலக அறையின் கண்ணாடியை அடித்து நொருக்கினர்.

இருப்பினும் உடனடியாக வழக்கு பதிவு செய்து சம்மந்தப்பட்ட பள்ளியின் தாளாளர், நிர்வாகிகள், முதல்வர் உள்ளிட்ட அனைத்து நபர்களையும் கைது செய்து நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி நொச்சிமேடு என்ற இடத்தில் திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வநாகரெத்தினம் தலைமையிலான காவல்துறை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறியதை அடுத்து நள்ளிரவில் மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மேலும் தலைமறைவான பள்ளியின் தலைமை ஆசிரியை விஜயலெட்சுமியை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் மணப்பாறையில் நேற்று மாலையில் இருந்து நள்ளிரவு வரை பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ரூ.5,000 லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலர் கைது..!

திருச்சி மாவட்டம், மருங்காபுரி வட்டம், மணப்பாறை அருகே உள்ள கண்ணூத்து கிராமத்தை சேர்ந்த பார்த்திபன் பொறியியல் படித்து முடித்து இவர் சொந்தமாக ஜே.சி.பி. இயந்திரம் வாங்கி வாடைக்கு விட்டு தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் விராலிமலையை சேர்ந்த ரங்கசாமி என்பவரிடம் கடந்த 2021 -ம் ஆண்டு மாத வாடகைக்கு தனது ஜேசிபி இயந்திர வாகனத்தை பார்த்திபன் கொடுத்திருக்கிறார்.

வண்டியை வாடகைக்கு எடுத்த ரங்கசாமி சில மாதங்கள் மட்டும் வாடகையை கொடுத்துவிட்டு வாகன உரிமையாளரான பார்த்திபனுக்கு தெரியாமலேயே வண்டியை விற்றுவிட்டார். இதனால் அதிர்ந்து போன பார்த்திபன் தன்னிடம் மோசடி செய்த ரங்கசாமி மீது புத்தாநத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதைத் தொடர்ந்து பார்த்திபனின் ஜே.சி.பி. இயந்திரத்தை மீட்டு அதனை மணப்பாறை நீதிமன்றத்தில் காவல்துறை ஒப்படைத்தது. அங்கிருந்து தனது வாகனத்தை மீட்பதற்கு பல்வேறு நடைமுறைகள் இருந்ததால், தனது ஜே.சி.பி.யை விரைந்து தன்னிடம் ஒப்படைக்கக் கோரி உயர்நீதிமன்ற கிளையில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார்.

அந்த மனு மீது தீர்ப்பளித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, 5 லட்சம் ரூபாய் சொத்து மதிப்பு சான்றிதழை மணப்பாறை நீதிமன்றத்தில் கொடுத்துவிட்டு ஜேசிபியை மீட்டுச் செல்லலாம் என உத்தரவிட்டது. அதன் பேரில் சொத்து மதிப்புச் சான்றிதழ் கோரி மணப்பாறை தாசில்தார் அலுவலகத்தில் அவர் மனு கொடுத்திருக்கிறார். அந்த மனுவை விசாரித்து பரிந்துரை செய்யுமாறு கண்ணூத்து கிராம நிர்வாக அதிகாரி அமீர்கானுக்கு தாசில்தார் அலுவலகம் ஃபார்வாட் செய்திருக்கிறது.

ஆனால், பார்த்திபனிடம், கண்ணூத்து கிராம நிர்வாக அதிகாரி அமீர்கான் ரூ.5,000 லஞ்சம் கொடுத்தால் சொத்து மதிப்புச் சான்றிதழுக்கு உடனே பரிந்துரை செய்வதாக தெரிவித்துள்ளார். இதனால் கொதித்துப் போன பார்த்திபன் இது குறித்த தகவலை லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறை ரசாயனம் தடவிய ரூ.5,000 பணத்தை பார்த்திபனிடம் கொடுத்து கிராம நிர்வாக அலுவலரிடம் கொடுக்கும் படி கூறியுள்ளனர்.

இதையடுத்து பார்த்திபன் கிராம நிர்வாக அலுவலரிடம் ரசாயனம் தடவிய பணத்தை லஞ்சமாக கொடுத்தபோது கிராம நிர்வாக அலுவலர் அதனை பெற்றதும் அங்கு மறைந்திருந்த லஞ்சம் ஒழிப்புத்துறை காவல்துறை கையும் களவுமாக கிராம நிர்வாக அலுவலர் அமீர்கானை கைது செய்தனர்.