அஜித் பவார்: சொந்த குடும்பத்தையே உடைக்கும் ஒருவரை இந்த சமூகம் எப்போதும் ஏற்றுக்கொள்ளாது..!

மகாராஷ்டிரா தேர்தல் நெருங்குவதை ஒட்டி துணை முதலமைச்சர் அஜித் பவாரின் தேசியவாத – பாஜக – ஷிண்டே சிவசேனா ஆகியோர் இடம் பெற்றுள்ள மஹாயுதி கூட்டணியில் குழப்பம் நீடித்து வருகிறது.

மகாராஷ்டிராவில் முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே, துணை முதலமைச்சராக தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகின்றது. மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத்தின் பதவிக்காலம் 2024 இல் முடிவடையும் நிலையில் அடுத்த சட்டமன்றத் தேர்தல் அக்டோபர் 2024 இல் அல்லது அதற்கு முன்னதாக மாநிலத்தின் அனைத்து 288 சட்டமன்ற உறுப்பினர்களையும் தேர்ந்தெடுக்க எதிர்பார்க்கப்படுகிறது.

2024 -ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் மகாராஷ்டிர மாநில சட்டமன்றத் தேர்தலில் மகாயுதி கூட்டணிக்கும் மகா விகாஸ் அகாதிக்கும் இடையே பெரும் போட்டி நிலவி வருகின்றது. இந்நிலையில், சித்தப்பா சரத் பவாரின் தேசியவாத காங்கிரசை உடைத்து தனது ஆதரவாளர்களுடன் தங்கள் பக்கம் வந்த அவரது அண்ணன் மகன் அஜித் பவாரின் நடவடிக்கைகளை பாஜக மேலிடம் சந்தேகக் கண்களோடு கவனித்து வருகிறது.

குறிப்பாக மக்களவைத் தேர்தலில் சரத் பவார் அணி சார்பில் இந்திய கூட்டணி வேட்பாளராக போட்டியிட்டு வென்ற சகோதரி சுப்ரியா சூலேவை எதிர்த்து தனது மனைவியை நிறுத்தியிருக்கக்கூடாது என்று அஜித் பவார் கூறியது கூட்டணியில் விரிசல் ஏற்பட்டு வருவதை வெளிப்படையாக காட்டியது. மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிர பாஜக கூட்டணி பின் தங்கியதற்கு அஜித் பவார் அணி தான் காரணம் என்ற சலசலப்பும் கூட்டணி கட்சிகள் மத்தியில் இருந்து வருகிறது.

எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் தான் போட்டியிடவில்லை என்று அறிவித்த அஜித் பவார் மகனை நிறுத்த திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்நிலையில் குடும்பத்தை உடைத்தது பெரிய தவறு என்று அஜித் பவார் பொதுவெளியில் மீண்டும் வருத்தப்பட்டு உள்ளார். அஜித் பவார் அணியைச் சேர்ந்த அமைச்சர் பாபா ஆத்ராம் என்பவரது மகள் பாக்கியஸ்ரீ சரத்பவார் தேசியவாத காங்கிரஸ் அணிக்கு தாவ உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு எனது மகளையும் மருமகனையும் ஆற்றில் தூக்கி வீசுங்கள் என்று பாபா ஆத்ரம் கடுமையாக பேசியிருந்தார்.

இந்நிலையில் கட்சிரோலி நகரில் நடந்த ஜனசம்மான் பேரணியில் கலந்துகொண்ட அஜித் பவார், ஒரு மகளை அவரது தந்தையை விட யாரும் அதிகமாக நேசிக்க மாட்டார்கள், உங்களை ஜில்லா பிரெசிடெண்டாக ஆக்கினார் உங்கள் தந்தை. ஆனால் நீங்கள் இப்போது அவருடன் சண்டை போடுவது சரிதானா? உங்கள் தந்தைக்கு நீங்கள் ஆதரவாக இருக்க வேண்டும். அவரை விட்டு செல்வது குடும்பத்தை உடைப்பது போன்றது தனது சொந்த குடும்பத்தையே உடைக்கும் ஒருவரை இந்த சமூகம் எப்போதும் ஏற்றுக்கொள்ளாது.

நானும் அதை அனுபவித்திருக்கிறேன், எனது தவறை நான் ஏற்றுகொண்டடேன் என்று தெரிவித்துள்ளார். சரத் பவாரை விட்டு வெளியேறியதைத் தவறு என்று அஜித் பாவர் கூறியுள்ளது பாஜக மேலிடத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது அரசியல் வட்டாரங்களில் பேச்சு அடிபட்டு கொண்டுள்ளதாம்.

மகாராஷ்டிரா தேர்தல்: உத்தவ் தாக்கரேவுக்கு காங்கிரஸ், சரத் பவார் நெருக்கடி..!

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல், அக்டோபர் மாதம் நடைபெற இருக்கிறது. இத்தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு அரசியல் கட்சிகளிடையே தீவிரம் அடைந்துள்ளது. மக்களவைத் தேர்தலில் தொகுதிப் பங்கீட்டை விரைந்து முடித்ததுபோல், இப்போதும் விரைந்து முடிக்க எதிர்க்கட்சிக் கூட்டணியான மகாவிகாஷ் அகாடி முயன்று வருகிறது. சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு மீண்டும் முதலமைச்சராகும் ஆசையில் இருக்கிறார் உத்தவ் தாக்கரே. இதற்காக சமீபத்தில் டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர்களைச் சந்தித்து, தனது விருப்பத்தைத் தெரிவித்துவிட்டு வந்தார்.

ஆனால் முதலமைச்சர் விவகாரத்தில் காங்கிரஸ் இறங்கி வர மறுத்துவிட்டது. அதே போன்று சரத் பவாரும் இவ்விவகாரத்தில் இறங்கி வர மறுக்கிறார். தேர்தலில் எந்த கட்சி அதிக தொகுதிகளில் வெற்றி பெறுகிறதோ, அந்த கட்சிக்கு முதலமைச்சர் பதவி என்பதில் காங்கிரஸும், சரத் பவாரும் உறுதியாக இருக்கின்றனர். அதோடு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) கட்சிகள் சிவசேனா (உத்தவ்)வை விட கூடுதல் இடங்களில் வெற்றி பெற்று, உத்தவ் தாக்கரேயிக்கு நெருக்கடி கொடுத்து இருக்கின்றன. மேலும் உத்தவ் தாக்கரே மற்றும் சரத் பவார் கட்சிகளில் இருந்த எம்.எல்.ஏ-க்களில் பெரும்பாலானவர்கள் கட்சி உடைந்த பிறகு எதிரணிக்குச் சென்றுவிட்டனர்.

இதனால் சிவசேனா (உத்தவ்) மற்றும் தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) கட்சிகள் பலவீனமடைந்துவிட்டதாகக் கூறி, காங்கிரஸ் தங்களுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்கவேண்டும் என்று கூறி வருகிறது. இதே போன்று சரத் பவாரும் தங்களது கட்சி மக்களவைத் தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று இருப்பதாகக் கூறி, சட்டமன்றத் தேர்தலில் கூடுதல் தொகுதிகள் கேட்டுக்கொண்டிருக்கிறார். இதனால் உத்தவ் தாக்கரே விழி பிதுங்கிக்கொண்டிருக்கிறார். சட்டமன்றத் தேர்தலில் கூடுதல் தொகுதிகளில் போட்டியிட்டு அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று முதலமைச்சர் பதவியை கைப்பற்றிவிடலாம் என்று உத்தவ் தாக்கரே நினைத்தார். ஆனால் கூட்டணிக் கட்சிகள் இரண்டும் அதற்கு வாய்ப்பு கொடுக்காமல் கூடுதல் தொகுதிகள் கேட்டு வருகின்றன.

2019-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஒன்றுபட்ட சிவசேனா 56 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ் 54 தொகுதிகளிலும், காங்கிரஸ் 44 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. இந்த 154 தொகுதிகளை அந்தந்த கட்சிகளுக்கு ஒதுக்குவது என்று மூன்று கட்சிகளும் முடிவு செய்துள்ளன. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் வெற்றி பெற்ற 154 தொகுதிகள் போக எஞ்சியுள்ள 134 தொகுதிகளை மூன்று கட்சிகளும் உள்ளூரில் இருக்கும் செல்வாக்கின் அடிப்படையில் பகிர்ந்து கொள்ள முடிவு செய்துள்ளன.