SBI பெயரில் போலி வங்கி..! இளைஞர்களிடம் பல லட்சம் பணம் பெற்று போலி பணி நியமன ஆணை..!

போலியாக SBI வங்கியை ஒன்று உருவாக்கி அந்த வங்கிக்கு புதிதாக ஆட்களை வேலைக்கு சேர்த்து ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டுள்ளது. அச்சு அசலாக SBI வங்கி கிளை போலவே கவுண்ட்டர்கள், அறைகள் எல்லாம் அமைத்து செட் அப் செய்து இந்த மோசடியை அரங்கேற்றியிருக்கிறார்கள்.

மக்கள் திரும்பும் திசை எல்லாம் வித விதமான மோசடிகள் நாளுக்கும் நாள் அதிகரித்து வருகின்றன. ஆனால், போலியாக எஸ்பிஐ வங்கி கிளை ஒன்றை ஆரம்பித்து., அங்கு பணியாற்ற ஊழியர்களை நியமித்து பல லட்சக்கணக்கான பணத்தை ஒரு மோசடி கும்பல் ஆட்டையை போட்டுள்ளது.

சத்தீஷ்கர் மாநிலத்தின் தலைநகரான ராய்ப்பூரில் இருந்து 250 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நகரம் சஹப்போரா. இந்த பகுதியில் திடீரென புதிதாக SBI வங்கி கிளை ஒன்று முளைத்தது. யாருக்கும் சந்தேகம் வந்துவிடக்கூடாது என்பதற்காக கவுண்டர்கள் அமைத்து அச்சு அசலாக SBI வங்கி கிளை போலவே செட் அப் செய்து இருக்கிறார்கள். 10 நாட்களாக படு ஜோராக இந்த போலி வங்கி இயங்கி வந்து கொண்டு இருக்கிறது.

அப்போது, அஜய் குமார் அகர்வால் என்ற உள்ளூர் நிர்வாகி ஒருவர் SBI வங்கியின் சேவை மையம் தொடங்குவதற்கு விண்ணப்பித்து இருந்தார். அவருக்கு சப்பரோவில் ஒரே நாள் இரவில் SBI வங்கி கிளை அமைக்கப்பட்டதால் சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக அருகில் உள்ள தப்ரா நகரின் SBI மேலாளரிடம் இது பற்றி தகவல் கொடுத்தபோதுதான் இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதையடுத்து, SBI வங்கி தரப்பில் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது. ரூ.7 ஆயிரத்திற்கு கட்டிடம் ஒன்றை வாடகைக்கு எடுத்த கும்பல் போலி வங்கி ஆரம்பித்ததோடு, 30 ஆயிரம் ரூபாய் சம்பளம் என ஆட்சேர்ப்பு நடத்தி, அப்பாவி இளைஞர்களிடம் பல லட்சம் பணம் பெற்றுக்கொண்டு போலி பணி நியமன ஆணையும் கொடுத்து ஏமாற்றியிருக்கிறது. SBI வங்கியின் பெயரில் தனியாக கிளை ஒன்றை ஆரம்பித்து மோசடி நடைபெற்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.