போலி ஆவணத்தில் கூட்டுறவு சங்கத்தில் கடன்பெற முயன்ற பாஜக முன்னாள் நிர்வாகி கைது..!

திருச்சி மாவட்டம் ஜீயபுரம் அடுத்த அல்லூர் அக்ரஹாரத்தை சேர்ந்த பாஜக முன்னாள் மண்டல தலைவர் பிரகாஷ், அதே ஊரை சேர்ந்த ஜெயராமன் மனைவி புவனேஸ்வரியும் வேளாண் கடன் பெறுவதற்காக அந்தநல்லூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் கடந்த 5-ஆம்தேதி மனு கொடுத்தனர். அதில் அடங்கல் சான்றிதழில் வி.ஏ.ஓ கையொப்பத்தை தாமாகவே போட்டதுடன், அலுவலக முத்திரையையும் போலியாக தயாரித்து பயன்படுத்தியது தெரியவந்தது.

தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தினர் விஏஓ தரப்பில் விசாரித்த போது சான்றிதழ் வழங்கியது உண்மையல்ல என தெரிவித்தார். இதையடுத்து மனுவை நிராகரித்த கூட்டுறவு கடன் சங்க செயலாளர் பரமேஸ்வரன், ஜீயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து காவல்துறை வழக்கு பதிந்து பிரகாஷ், புவனேஸ்வரி ஆகியோரை கைது செய்தனர்.

போலி ஆவணம் தயாரித்து ரூ.1.07 கோடி நிலத்தை விற்ற போலி ரியல் எஸ்டேட் உரிமையாளர் கைது

பெங்களூரில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வரும் சென்னை கே.கே. நகர், 9-வது செக்ட்டர் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீனிவாசன் வீட்டுமனை வாங்க முயற்சித்தபோது காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு, பரணி புதூரைச் சேர்ந்த சிந்துஜா ரியல் எஸ்டேட் நடத்திவரும் பண்பரசன் என்பவருக்கு பழக்கம் ஏற்பட்டது.

பண்பரசன், பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம், செந்தூரபுரத்தில் கல்யாணி என்பவருக்கு சொந்தமான 2,350 சதுர அடி நிலத்தின் அசல் பத்திரம் தன்னிடம் இருப்பதாக கூறி ரூ.99 லட்சத்திற்கு விலை பேசியுள்ளார். இதில், பண்பரசன், இரண்டு தவணைகளில் காசோலை மற்றும் பணமாக ஸ்ரீனிவாசனிடம் ரூ.99 லட்சம் பணத்தை பெற்றுக் கொண்டு, குன்றத்தூர் சார் – பதிவாளர் அலுவலகத்தில் நிலத்தை பத்திரப்பதிவும் செய்து கொடுத்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, ஸ்ரீனிவாசன் தான் வாங்கிய நிலத்தை சென்று பார்த்தபோது, இந்த நிலத்தின் உரிமையாளரான கல்யாணி, நிலத்தை யாருக்கும் விற்கவில்லை என கூறியுள்ளார். மேலும் நிலத்தின் மதிப்பு ரூ.1.07 கோடி எனவும் கூறியுள்ளார். இதனை கேட்ட ஸ்ரீனிவாசன் அதிர்ச்சி அடைந்தார். அதிர்ச்சி அடைந்த ஸ்ரீனிவாசன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆவடி மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் விசாரித்த மத்திய குற்றப்பிரிவு காவல்துறை மாங்காடு, பரணி புதூரைச் சேர்ந்த பண்பரசன் நேற்று கைது செய்து பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.

போலி ஆவணம் தயாரித்து மூதாட்டியின் ரூ.4 கோடி மதிப்பிலான நிலத்தை ஆட்டையை போட்ட 5 பேர் கைது

சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த லைசா ஜோன்பின் என்பவர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்திருந்தார். அதில், அம்பத்தூர் அடுத்த கொன்னூர் கிராமத்தில் எனக்கு சொந்தமான 3,544 சதுர அடி காலி வீட்டு மனை உள்ளது. இந்த இடத்தை, எனது தந்தை வேளாங்கண்ணி கடந்த 1965-ம் ஆண்டு எனக்கு கிரையம் செய்து கொடுத்தார்.

கடந்த 1979-ம் ஆண்டு எனது தந்தை இறந்த நிலையில், மேற்கண்ட வீட்டு மனை எனது கட்டுப்பாட்டில் இருந்தது. காலி மனையாக இடம் இருந்ததால் சிலர் எனது இடத்தை போலி ஆவணம் மூலம், ஆள்மாறாட்டம் செய்து, அபகரித்துள்ளனர். எனவே அவர்களிடம் இருந்து எனது இடத்தை மீட்டு தர வேண்டும், என்று தெரிவித்து இருந்தார். இதுகுறித்து உரிய விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு காவல்துறைக்கு காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டார்.அதன்படி, அப்பிரிவு துணை ஆணையர் ஆரோக்கியம் மேற்பார்வையில் ஆய்வாளர் முருகேஷ்வரி விசாரணை நடத்தினார்.

அதில், அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ காலனியை சேர்ந்த பாபு, திருவேற்காடு அயப்பாக்கத்தை சேர்ந்த முருகப்பன், மற்றும் அன்பு நகர் 3-வது தெருவை சேர்ந்த முத்து, வில்லிவாக்கம் ராஜமங்கலம் 3வது தெருவை சேர்ந்த நாகராஜ், தி.நகர் வடக்கு உஸ்மான் ரோடு விவேகானந்தா தெருவை சேர்ந்த குருசாமி, ஆகியோர், கூட்டாக சேர்ந்து லைசா ஜோஸ்பினுக்கு சொந்தமான ரூ.4 கோடி மதிப்புள்ள 3,544 சதுரடி நிலத்தை போலி ஆவணம் தயாரித்து, ஆள்மாறாட்டம் செய்து, இடத்தை அபகரித்தது தெரியவந்தது.

அதை தொடர்ந்து காவல் ஆய்வாளர் முருகேஸ்வரி தலைமையிலான காவல்துறை, மோசடியில் ஈடுபட்ட பாபு, முருகப்பன், குருசாமி, நாகராஜ், முத்து ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து போலி பத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவர்களை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றனர்.

போலி ஆவணம் தயாரித்து ரூ.1 கோடி நிலம் மோசடி..!

சென்னை, ஆவடி காமராஜர் நகர் சேக்காடு மெயின் ரோட்டை சேர்ந்த ராஜசேகரன் (வயது 55). இவருக்கு சொந்தமான இடம் சேக்காடு பகுதியில் உள்ளது. இந்த நிலத்தை சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தனியார் வங்கியில் அடமானம் வைத்துள்ளார். இதையடுத்து ராஜசேகரன் அவரது இடத்திற்கான வில்லங்க சான்று பெற்று பார்த்தபோது, அவரது இடம் வேறு இரண்டு பேருக்கு விற்பனை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ராஜசேகரன் இதுகுறித்து பத்திரப்பதிவு அலுவலகத்தில் விசாரித்துள்ளார்.

இந்நிலையில் இவருக்கு சொந்தமான அந்த இடத்தை ஆவடி அடுத்த சேக்காடு கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த யுவராஜ் மற்றும் அவரது நண்பர்களான பூஞ்சோலை, இன்பகுமார், சரத்குமார் ஆகிய 4 பேரும் சேர்ந்து ராஜசேகரன் பெயரில் உள்ள நிலத்தை ஆள் மாறாட்டம் செய்து போலி ஆவணங்கள் தயார் செய்து 2 நபர்களுக்கு இடத்தை பிரித்து ரூ.15 லட்சத்திற்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து ராஜசேகரன் ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.

புகாரின் பேரில், ஆவடி காவல் ஆணையர் சங்கர் உத்தரவின் பேரில், துணை ஆணையர் பெருமாள் ஆலோசனைப்படி, கூடுதல் துணை ஆணையர் முத்துவேல் பாண்டி மேற்பார்வையில், ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலி ஆவண தடுப்பு பிரிவு ஆய்வாளர் வள்ளி இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.

அதன்பேரில் இந்த வழக்கில் தொடர்புடைய ஆவடி அடுத்த சேக்காடு மெயின் ரோடு காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த பூஞ்சோலை என்பவரை கைது செய்து விசாரித்ததில் ராஜசேகரன் இடத்தை 4 பேரும் சேர்ந்து போலி ஆவணம் தயாரித்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறை பூஞ்சோலை மீது வழக்குப்பதிவு செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும் 3 பேரை காவல்துறை வலைவீசி தேடி வருகின்றனர்.