தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று சமீபத்தில் தமிழ்நாடு போக்குவரத்து துறை காவல்துறையினரும் எச்சரிக்கை விடுத்து இருந்தனர். இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் சாலை போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை கண்டுபிடிக்க முக்கியமான நடைமுறை ஒன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி போக்குவரத்து விதிமீறல் செய்பவர்களை பிடித்து அவர்களிடம் அபராதம் வசூலிக்க நேரம் செலவழிக்காமல், அவர்களை போட்டோ எடுத்து நேரடியாக அவர்களின் வாகன எண்ணில் இணைக்கப்பட்டு இருக்கும் விலாசத்திற்கும், போன் எண்ணிற்கும் அபராதம் அனுப்பப்படும் முறை கொண்டு வரப்பட்டு உள்ளது.
நீங்கள் வேகமாக ஹெல்மெட் போடாமல் பைக்கில் செல்கிறீர்கள். காவல்துறை உங்களை பிடிக்க முடியவில்லை என்றாலும், அவர் போட்டோ எடுத்தால் போதும் அபராதம் உங்களை தேடி வருகிறது. பெங்களூர் போன்ற நகரங்களில் ஏற்கனவே இந்த முறை நடைமுறையில் உள்ளது. ஆனால் சென்னையில் இதில் கூடுதல் ஒரு வழிமுறையும் சேர்க்கப்பட்டு உள்ளது. சென்னையில் காவல்துறை மட்டுமின்றி மக்களும் போட்டோ எடுக்க முடியும். மக்களும் போட்டோ எடுத்து ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்ய முடியும். அதில் இருக்கும் நம்பரை பார்த்து.. ஹெல்மெட் இல்லாமல் பைக் ஓட்டுபவர்கள் சென்றால்.. அந்த நம்பருக்கு தானாக அபராதம் அனுப்பப்படும்.
இந்த நடைமுறையை கடந்த சில நாட்களாக காவல்துறை பின்பற்றி வருகின்றனர். ஆனால் இந்த புதிய முறை தற்போது கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. அதன்படி சில இளைஞர்கள் பெண்களை தவறான கோணத்தில் ஆபாசமாக படம் எடுத்து.. அதை இணையத்தில் போஸ்ட் செய்து.. இவர் ஹெல்மெட் போடவில்லை என்பது போல போஸ்ட் செய்கின்றனர்.
அதற்கு காவல்துறையினருக்கு அந்த இளைஞர்களை கண்டிக்காமல்.. ஹெல்மெட் போடாத ஓட்டுனருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். அந்த இளைஞரின் செயலும், காவல்துறையினரின் பதிலும் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. சாலை விதிகளை மதிக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்திற்காக காவல்துறை இந்த விதிகளை கொண்டு வந்து இருக்கலாம். ஆனால் இதை சில இளைஞர்கள் தவறாக பயன்படுத்தி அதை வைத்து பெண்களை புகைப்படம் எடுக்கிறார்கள். அதை காவல்துறை கண்டிப்பது இல்லை என்று விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.
அதேபோல் சாலை விதிகளை மீறுபவர்களை கண்டிப்பது காவல்துறையினரின் வேலை. அதை மக்கள் கையில் கொடுப்பது தவறு. தேவையில்லாத மோதல்களுக்கு இது வழி வகுக்கும் என்று கூறி உள்ளனர். மேலே காட்டப்பட்டுள்ள டீவிட்டில் கூட இளைஞர் ஒருவர் மாடர்ன் உடை அணிந்துள்ள பெண்ணை புகைப்படம் எடுத்துள்ளார். ஆனால் அவர் அருகே இருக்கும் ஹெல்மெட் அணியாத மற்ற ஆணை எடுக்கவில்லை. இதை காவல்துறையினரும் கண்டிக்காமல் அந்த பெண் சென்ற பைக்கிற்கு அபராதம் விதித்துள்ளனர். இதை நெட்டிசன்கள் பலரும் கடுமையாக வறுத்தெடுத்து வருகின்றனர்.