சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி லஞ்சஒழிப்பு காவல்துறை சோதனை…! ரூ.5 ஆயிரம் ரொக்கத்துடன் சிக்கிய ஊழியர்..!

கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்சஒழிப்பு காவல்துறை அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது பேரூராட்சி அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்க்கும் நடராஜ் என்பரிடம் ரூ.5 ஆயிரம் ரொக்கப்பணம் இருப்பது தெரிய வந்தது. எனவே காவல்துறை அந்த பணம் எப்படி வந்தது என்று கேட்டனர். இதற்கு நடராஜிடம் சரியான பதில் அளிக்கவில்லை. எனவே அந்த பணத்தை லஞ்சஒழிப்பு காவல்துறை பறிமுதல் செய்தனர்.

இதனை தொடர்ந்து பேரூராட்சி ஊழியர் நடராஜை லஞ்சஒழிப்பு காவல்துறை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது சூளேஸ்வரன்பட்டியில் அரசு வேலைகளை செய்து தருவதற்காக பொதுமக்களிடம் லஞ்சம் வாங்கியதாக, பேரூராட்சி ஊழியர் நடராஜை காவல்துறை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

காவல் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை..!

கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி அருகே மரபேட்டையில் உள்ள பொட்டு மேடு பகுதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அங்கு நாட்டுக்கல்பாளையத்தை சேர்ந்த சக்திநாராயணனுக்கு சொந்தமான நிலத்தை சுத்தம் செய்ய அவரது டிரைவர் கலைபிரபு சென்றார்.

அவர், பொக்லைன் எந்திரம் மூலம் மண்ணை கொட்டியபோது, குடியிருப்புகளின் வழித்தடத்தை மறைத்து கொட்டியதாக கூறப்படுகிறது.இதை கண்ட அப்பகுதி பொதுமக்கள், அவரை தடுத்து நிறுத்தினர். உடனே அவர்களுடன், கலைபிரபு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது சாதி பெயரை சொல்லி திட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மகாலிங்கபுரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே காவல்துறை, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் அந்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டது. இதை ஏற்று போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

தமுமுக மமக மாவட்ட தலைவர் நில மோசடி வழக்கில் தொடர்பா…!?

பொள்ளாச்சி நகர கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பழனி அவர்களிடம் பொள்ளாச்சி சூளேஸ்வரன்பட்டி, கட்டபொம்மன் வீதியில் வசித்து வரும் இப்ராகிம் மகன் அஜ்மத்துல்லா என்பவர் பொள்ளாச்சி தாலுக்கா, ஜாமீன் ஊத்துக்குளி கிராமத்தில் வீட்டுமனை விற்பனை செய்வதாக கூறி கோவை, சுந்தராபுரம், அசோக் நகரில் வசித்து வரும் அப்துல் ரஹமான் மகன் அப்துல் பாரி என்பவரும் அவரது உறவினர் கோவை தெற்கு மாவட்டம் தமுமுக மமக மாவட்ட தலைவர் M.S. அகமது கபூர் ஆகிய இருவரும் சேர்ந்து ஒரு செண்ட் ரூ. 80,000 வீதம் 3 செண்ட் ரூ. 2,40,000 திற்கு பேசி 12-08-2010 அன்று ரூ.1,00,000 அட்வான்சாக பெற்றனர்.

மேலும் மீதி செலுத்த வேண்டிய தொகையில் 01-12-2013 அன்று ரூ.1,15,000 பெற்றனர் என்றும் இதுநாள் வரைக்கும் அப்துல் பாரி அவர்கள் அஜ்மத்துல்லாவிற்கு வீட்டுமனை கொடுக்காமல் இழுத்தடித்து வந்தால் கோவை, பொள்ளாச்சி நகர கிழக்கு நிலையத்தில் அப்துல் பாரி மற்றும் அவரது உறவினர் M.S. அகமது கபூர் மீது நில மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.