மதுரையை தலைமையிடமாக கொண்டு இயக்குநர்களாக கமலக்கண்ணன், பாலசுப்ரமணியன், பாஜக பிரமுகரான வீரசக்தி மற்றும் பலர் உள்ள நியோமேக்ஸ் பிராபர்ட்டீஸ் (பி) லிமிடெட் என்ற நிறுவனம் செயல்பட்டு வந்தன. இந்நிறுவனத்தின் கீழ் கர்லாண்டோ பிராபர்ட்டீஸ் (பி) லிமிடெட் உள்ளிட்ட 5 கிளைகள் செயல்பட்டன. இந்த நிறுவனத்துக்கு பாளையங்கோட்டை, கோவில்பட்டி, மதுரை மற்றும் திருச்சி என பல இடங்களில் அலுவலகங்கள் செயல்பட்டன.
தங்கள் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால், மாதம் 12% முதல் 30% வரை வட்டி தருவதாகவும் பணத்தை இரண்டரை முதல் 3 ஆண்டில் இரட்டிப்பாக தருவதாகவும் கூறி முதலீடுகளை வசூலித்துள்ளனர். இதை நம்பி தென்மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் ரூ.10 லட்சம் முதல் ரூ. 1 கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளனர். ஆனால் கூறியபடி யாருக்கும் வட்டி தராமல் ரூ.5 ஆயிரம் கோடி வரை வசூலித்து ஏமாற்றியுள்ளனர்.
இந்நிலையில், மதுரை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை, நிறுவனத்தின் இயக்குநர்கள் கமலக்கண்ணன், பாலசுப்பிரமணியன், பாஜக பிரமுகர் வீரசக்தி உள்ளிட்ட 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கடந்த ஜூன் 24-ம் தேதி பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை, மதுரை காளவாசல் அருகே உள்ள நியோமேக்ஸ் அலுவலகத்தில் சோதனை நடத்தினர். இவ்வழக்கு தொடர்பாக தொடர்ந்து சைமன் ராஜா, கபில், இசக்கி முத்து, சகாய ராஜா ஆகிய நியோமேக்ஸ் கிளை நிறுவனங்களின் 4 இயக்குநர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் பாஜக பிரமுகரான வீரசக்தி தலைமறைவாக உள்ளார். அவரை காவல்துறை தேடி வருகின்றனர்.
இந்நிலையில், மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், நெல்லை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் நியோமேக்ஸ்க்கு சொந்தமான 30-க்கும் மேற்பட்ட இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை நேற்று திடீர் ஆய்வு நடத்தி, அதிரடிச் சோதனையில் ஈடுபட்டு முக்கிய சொத்து ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர்.