பேருந்து நிறுத்தத்தை முழுமையாக ஆக்கிரமித்த ஸ்ரீ பாலமுருகன் விலாஸ்..! உயிருக்கு ஆபத்தான நிலையில் பொதுமக்கள்..!!

கோவை மாவட்டம், பொள்ளாச்சி – உடுமலை சாலை தேர்முட்டி பேருந்து நிறுத்தத்தில் ஸ்ரீ பாலமுருகன் விலாஸ் நெல்லை லாலா ஸ்வீட்ஸ் அண்ட் பேக்கரி மற்றும் மிதுன் டீ ஸ்டால் அமைத்துள்ளது. இந்த ஸ்ரீ பாலமுருகன் விலாஸ் நெல்லை லாலா ஸ்வீட்ஸ் அண்ட் பேக்கரியில் காரசாரமான மிளகு பூந்தி, மசாலா கடலை, கடலை மிட்டாய், கை முறுக்கு, சுட சுட பக்கோடா, காப்பி, ஜிலேபி, ரஸ்குல்லா மற்றும் இனிப்பு வகைகள் அந்த பகுதி மக்களின் வரவேற்பை பெற்றது. இதனால் இங்கு எப்போதும் மக்கள் கூட்டம் அலை மோதுவது வழக்கம்.

இத்தனை சாதகமாக பயன்படுத்தும் இந்த ரீ பாலமுருகன் விலாஸ் நெல்லை லாலா ஸ்வீட்ஸ் அண்ட் பேக்கரியினர் பொது மக்களைப்பற்றி எந்த ஒரு கவலையும் இல்லாமல் பேருந்து நிறுத்தம் முழுவதையும் ஆக்கிரமிப்பு கொண்டனர். பேருந்து நிறுத்தம் இல்லாத காரணத்தால் பொது மக்கள் ஆபத்தான நிலையில் சாலையின் நடுவே நின்று பேருந்தில் ஏற வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

பொது மக்கள் சாலையின் நடுவே நின்று பேருந்தில் ஏறுவதால் எப்போது வேண்டுமானாலும் பெரிய விபத்துகள் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே விபத்துகள் ஏற்படும் உயிர் சேதம் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து பொதுமக்கள் உயிர் சேதம் ஏற்படாமல் தடுப்பார்களா என அப்பகுதி சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுகின்றனர்.

பொதுமக்கள் புகார் தெரிவிக்க செல்போன் எண் வீடு, ஆபீஸ் சுவர்களில் அச்சு..!

பொதுமக்கள் புகார் தெரிவிக்க வசதியாக நொளம்பூர் காவல் ஆய்வாளரின் செல்போன் எண், வீட்டின் சுவர், அலுவலக சுவர்களில் அச்சிடப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. சென்னை நொளம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 1000 -க்கும் மேற்பட்ட சுவர்களில் சட்டம், ஒழுங்கு ஆய்வாளர் சந்திரசேகரின் செல்போன் நம்பர் அச்சடிக்கப்பட்டு மக்களுக்கு அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, பொதுமக்கள் மற்றும் பெண்களுக்கு தங்களுக்கு எந்த பிரச்னை ஏற்பட்டாலும் உடனடியாக சுவரில் உள்ள ஆய்வாளரின் செல்போன் நம்பரை நேரடியாக தொடர்புகொண்டு தெரிவிக்கலாம். குறிப்பாக கல்லூரி, பள்ளி மாணவிகள், வேலைக்கு தனியாக செல்கின்ற பெண்கள் ஆகியோருக்கு இது மிகவும் வசதியாக உள்ளது. நொளம்பூர் காவல் நிலைய காவல்துறையினரின் இந்த நடவடிக்கைக்கு மக்கள் பெரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

சாலையில் சடலத்தை வைத்து பொதுமக்கள் மறியல்..!

விழுப்புரம் அருகே சுடுகாடு வசதி இல்லாததால் சாலையில் சடலத்தை வைத்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் விழுப்புரம்-புதுச்சேரி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம், கோலியனுார் அடுத்த பனங்குப்பம், புதுநகர் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் கருணாநிதி உடல்நலம் குறைவால் நேற்று முன்தினம் உயிரிழந்த நிலையில் அவரது சடலத்தை அடக்கம் செய்வதற்காக சுடுகாட்டுக்கு கொண்டு சென்றனர்.

அப்போது சுடுகாடு வசதி இல்லாததால் ஆத்திரமடைந்த அவரது குடும்பத்தினர், உறவினர்கள் திடீரென கோலியனூர் கூட்ரோடு பகுதியில் சாலையிலேயே சடலத்தை வைத்து மறியலில் ஈடுபட்டதால் விழுப்புரம்-புதுச்சேரி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்த வளவனூர் காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், பனங்குப்பம் புதிய காலனியில் இறந்தவர்களுக்கு சுடுகாடு இல்லாததால், வாய்க்காலுக்கு அருகே புதைத்து வருகிறோம். இதனால், இறந்தோரை புதைக்க தோண்டும் போது, வாய்க்காலில் இருந்து வெளியேறும் விஷவாயு தாக்கி, பலருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது. இந்த பிரச்னை சம்பந்தமாக நாங்கள் பல முறை, தாசில்தார் உட்பட பல அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இதனால், இப்பிரச்னை சம்பந்தமாக நாங்கள் முதலமைச்சருக்கு வேண்டுகோள் வைத்து போஸ்டர் வைத்து கொண்டு சடலத்தோடு ஊர்வலமாக வந்ததோடு, மறியலில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.

தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறை, நீங்கள் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் போராட்டம் செய்யக்கூடாது என்றும், உங்களின் கோரிக்கையை அதிகாரிகளிடம் முறையாக கொண்டு செல்லுங்கள், நாங்களும் இந்த பிரச்னையை அதிகாரிகளிடம் தெரிவிப்பதாக கூறியதன் பேரில் மறியலை கைவிட்டு, சடலத்தை பழைய இடத்திலேயே புதைக்க பொதுமக்கள் கொண்டு சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.