முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 107 -வது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நாடு முழுவதும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அன்னை இந்திரா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு வீரமங்கை ராணி வேலுநாச்சியார் பேத்தி மற்றும் வீரமங்கை பேரரசி வேலுநாச்சியார் கல்வி அறக்கட்டளை நிறுவனர் செல்வி.எம்.மாலதி அவர்கள் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், இந்தியாவின் முதலாவது பெண் பிரதமர் இந்தியாவின் இரும்பு பெண்மணி அன்னை இந்திரா காந்தி உலகம் போற்றும் தலைவர் ஆவார்.
மிகவும் வசதியான குடும்பத்தில் பிறந்து, வாழ்வின் வசந்தத்தை இழந்து இந்த தேசத்திற்காக உழைத்த தியாக மலர் தான் இந்திரா காந்தி. தமது தந்தை ஆசியாவின் ஜோதி ஜவஹர்லால் நேரு இந்திய நாட்டின் விடுதலைக்காக போராடி தொடர்ந்து சிறையிலேயே இருந்த நிலையில் மற்றும் தனது தாயார் கமலா நேரு உடல் நலம் பாதிக்கபட்ட நிலையில் சிறுமியாக இருந்த இந்திரா காந்தி ஆதரவற்ற நிலையில், பெற்றோர்கள் அரவணைப்பு இன்றி வாழ்க்கை பயணத்தில் புயல் இரவுகளுக்கும், பூகம்ப நாட்களுக்கும் மத்தியில் தமது வாழ்க்கை பயணத்தை தொடங்கினார்.
தமது தந்தை ஜவஹர்லால் நேரு சிறையில் இருந்து தமது அருமை மகள் இந்திரா காந்திக்கு எழுதிய கடிதங்கள் உலகின் புகழ்பெற்ற புத்தகமாக வெளியிடப்பட்டது. தமது தாயார் கமலா நேருவைப் போல் தாம் சிறந்த பேச்சாளராக ஆகவேண்டும் என்று சிறுவயதிலேயே இந்திராகாந்தி உறுதி பூண்டார்.”ஜோன் ஆப் ஆர்க்”- கின் வாழ்க்கை வரலாற்றைப் படித்த இந்திரா காந்தி தானும் ஒரு ஜோன் ஆப் ஆர்க்காக விளங்கிட வேண்டும் என்று துடித்து நின்றார்.
தனது அரசியல் பின்னணிக்கு அப்பால் தன்னுடைய கடுமையான உழைப்பாலும், திறமையாலும், தியாகத்தாலும், அடக்கத்தாலும், அனைவரையும் மதிக்கும் பண்பாலும், காங்கிரஸ் பேரியக்கத்திலும், இந்திய
மக்கள் மத்தியிலும், உலக அரங்கிலும் சிறந்த தலைவராக இன்றும் மதித்துப் போற்றப்படுகிறார். இந்திரா காந்தி அவர்களுக்கு என்று ஒரு லட்சியம் இருந்தது. குறிக்கோள் இருந்தது. அதை நிறைவேற்றவே அரசியலில் குதித்தார். லால்பகதூர் சாஸ்திரியின் மந்திரிசபையில் தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சராக இருந்தார். அமைச்சரான சில நாட்களிலேயே அந்த துறையில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்தார். மிகவும் சிறப்பாக பணியாற்றும் அமைச்சர் என்று பெயர் எடுத்தார்.
இந்தியா -பாக்கிஸ்தான் போர் மூண்டபொழுது போர்முனைக்கு சென்று ராணுவ வீரர்கள் மத்தியில் வீரவுரை ஆற்றி வீர உணர்வூட்டினார் இந்திரா காந்தி இத்துணைக்கும் அவர் ஒரு அமைச்சராக இருந்து துணிவுடன் செயல் பட்டார். இந்தி எதிர்ப்பு போராட்டம் தமிழ்நாட்டில் உச்ச கட்டத்தில் இருந்த போது அமைச்சராக இருந்த இந்திரா காந்தி அவர்கள் பிரச்னையையை நேரில் கண்டு அறிந்து கொள்வதற்காகவும், தமிழ் மக்களின் நியாயமான அச்சத்தை தீர்ப்பதற்காகவும் துணிச்சலோடு தமிழ்நாடு வந்தவர் இந்திரா காந்தி. “இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரையில் இந்தியாவின் ஆட்சி மொழியாக ஆங்கிலமே நீடிக்கும் “-என்று ஜவஹர்லால் நேருவின் வாக்குறுதியை சுட்டிகாட்டி தமிழ் மக்களிடம் அமைதியை ஏற்படுத்தினார்.
அறைகூவல்களை நேருக்கு நேர் நின்று எதிர்கொள்ளும் துணிச்சலும், பிரச்சினைகளை தெரிந்து கொண்டு உடனுக்குடன் தீர்க்க முயலும் சுறுசுறுப்பும் ,சிறந்த தலைமைப்பண்பும் பிரதமராக ஆவதற்கு முன்பே நிரூபித்தவர். 1966-ல் இந்தியாவின் மூன்றாவது பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார். பல புரட்சிகரமான திட்டங்களை கொண்டு வந்தார். வங்கிகளை தேசிய உடமையாக்கப்பட்டன, மன்னர் மானியம் ஒழிக்கப்பட்டன, ஆயுள் காப்பீட்டு கழகம் தேசிய உடைமையானது, இருபது அம்சத்திட்டத்தின் மூலம் நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்தினார்.
சாதனை முத்திரைகள் பதித்து சரித்திரத்தின் பக்கங்களுக்கு சாகாவரம் தேடித்தந்த சிரஞ்சீவித் தலைவர் துணிச்சலும், நிர்வாக திறமையும் கொண்ட பெண்மணி என்று உலகமக்களால் போற்றப்படுகிறார். ஒரு கட்டத்தில் “இந்தியா என்றால் இந்திரா ; இந்திரா என்றால் இந்தியா”-என்ற தாரக மந்திரம் உலகம் முழுவதும் எதிரொலித்தது. பாரதப் பிரதமராக இந்திரா காந்தி பொறுப்பேற்று நாட்டின் அடிப்படை பிரச்சினைகள் பற்றி பல்வேறு துறை வல்லுநர்கள், அறிஞர்கள், சட்ட வல்லுநர்கள், கல்வியாளர்கள், விஞ்ஞானிகள், எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் சிந்தனையாளர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்களுடன் கலந்துரையாடி சிறந்த முடிவுகள் எடுத்து உலக அரங்கில் இந்தியாவை தலை சிறந்த நாடாக உயர்த்தினார்.
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கொடூரமான வகையில் தாக்கப்பட்டு வருகிறார்கள். 1982-ஆம் ஆண்டு இந்திரா காந்தி அவர்கள்பாரதப் பிரதமராக இருந்த போது இதே ராமேஸ்வரம் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய இலங்கை கடற்படை அதிகாரியை கப்பலுடன் கைது செய்து மண்டபம் துறைமுகத்திற்கு கொண்டு வந்தார்.
இலங்கை அதிகாரிகள் மன்னிப்பு கேட்டதால் விடுதலை செய்தார்கள். அப்படிப்பட்ட துணிச்சல் மிக்க வீரமிகு பிரதமராக இந்திரா காந்தி விளங்கினார். இந்திரா காந்தி பிரதமராக இருந்த பொழுதுதான் இந்தியா முதன்முதலில் அணுகுண்டு சோதனை நடத்தி இந்தியாவின் வலிமையை உலகிற்கு தெரியப்படுத்தியது. ஐ.நா.பாதுகாப்பு சபையில் இந்தியாவை உறுப்பினராக சேர்த்த பெருமை இந்திரா காந்தி அவர்களை சேரும்.
உலக அரங்கில் பெண்கள் அரசியலுக்கு வருவதற்கு இந்திரா காந்தி முன்னுதாரணமாக விளங்குகிறார். இந்தியாவின் என்றும் முழு நிலவாக பிரகாசித்துக் கொண்டிருக்கும் இந்திரா காந்தியின் பிறந்தநாளை தேசிய மகளிர் தினமாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி கேட்டு கொள்கிறேன் என செல்வி. எம்.மாலதி தமது வாழ்த்து செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.