சேலம் சூரமங்கலம் பகுதி அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள், உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய பழனிசாமி அதிமுகவின் 2 கோடி தொண்டர்களின் உணர்வுகள் குறித்து, நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், எம்.பி., எம்எல்ஏ-க்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அதில், பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இது கட்சியின் பொதுச் செயலாளர் எடுத்த முடிவு அல்ல. ஒட்டுமொத்த தொண்டர்கள் எடுத்த முடிவு. கூட்டணி முடிவு குறித்து பொதுச் செயலாளர் கருத்து சொல்லவில்லை என்று ஊடகங்கள் பேசுகின்றன. நிர்வாகிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்தான், இறுதி முடிவு. அனைவரின் சம்மதத்துடன் மட்டுமே இந்த முடிவு எடுக்கப்பட்டது.
தேசிய அளவில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டதால், நமக்கு உடன்பாடில்லாத பிரச்சினைகளிலும், அதை நிறைவேற்றும் நிலைக்குத் தள்ளப்பட்டோம். மக்களவைத் தேர்தலில் பிரதமர் யார் என்று கேட்கிறார்கள். ஒடிசா, மேற்கு வங்கம், ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் பிரதமரை முன்னிறுத்தியா தேர்தலை சந்தித்தனர்? தமிழக நலன்தான் நமக்கு முக்கியம். மாநில நலனை முன்னிறுத்தியே தேர்தலை சந்திப்போம்.
தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டுமென்பதே எங்கள் பிரதான நோக்கம். அதிமுக எப்போதும் சிறுபான்மையினரைப் பாதுகாக்கும். அதிமுக தேசியக் கட்சி அல்ல, மாநிலக் கட்சி. எனவே, தமிழகத்தைப் பாதிக்கக் கூடிய திட்டங்களை நிச்சயம் எதிர்ப்போம். வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையில் பிரம்மாண்டமான கூட்டணி அமைத்து, 40 இடங்களிலும் வெற்றி பெறுவோம் என பழனிசாமி பேசினார்.